ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் பேச்சு
சசிகலா அமைத்து கொடுத்த ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை என்று தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.
தேனி,
தேனி மாவட்ட அ.தி.மு.க. (அம்மா அணி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி-போடி சாலையில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வுமான தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:-
கலைக்க நினைக்கவில்லை
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும் என்பதற்காக தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியை பொதுச்செயலாளர் சசிகலா அமைத்து கொடுத்தார்.
ஆனால், தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அமைச்சர்கள் சேர்ந்து கொண்டு டி.டி.வி.தினகரனுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது, அறிக்கை விடுவது என்பது ஏற்புடையது இல்லை.
சசிகலா அமைத்து கொடுத்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியை நாங்கள் பலப்படுத்துகிறோம். ஆட்சியை நீங்கள் நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம். கட்சியை பலப்படுத்துவதற்காக தான் மாவட்டம் தோறும் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை கடவுள் மன்னிக்கமாட்டார்
சசிகலா குடும்பத்தால் அதிகம் பயன்பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். டி.டி.வி.தினகரனையும், சசிகலாவையும் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பது என்பது அவருடைய மனசாட்சிக்கே பிடிக்காது. 2000-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் எந்த நிலையில் இருந்தார்? என்பதும், டி.டி.வி.தினகரனால்தான் உயர்ந்த நிலைக்கு வந்தார் என்பதையும் தேனி மாவட்ட மக்கள் உணர்வார்கள்.
2011-ல் என்னை அமைச்சர் ஆகவிடாமல் தடுத்தது ஓ.பன்னீர்செல்வம் தான். அதனால்தான், தேனி மாவட்ட நிர்வாகிகள் அவர், பின்னால் போகவில்லை. மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஆனால் கூட பிரச்சினை இல்லை. சசிகலா குடும்பத்திற்கு அவர் செய்த துரோகத்தை கடவுள் மன்னிக்க மாட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டம் முடிந்த பிறகு தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘ஆட்சியை கலைக்க வேண்டும் என்றோ, ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்றோ எங்களுக்கு எண்ணம் இல்லை. கட்சியை பலப்படுத்த வேண்டும், ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்’ என்று கூறினார்.
Related Tags :
Next Story