டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்; அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்; அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Aug 2017 5:45 PM GMT (Updated: 14 Aug 2017 7:58 PM GMT)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

தமிழக அரசால் வழங்கப்பட்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில், தமிழகத்தில் கடந்த 6–ந்தேதி வரை டெங்கு காய்ச்சலால் 5 ஆயிரத்து 968 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஒருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் பொய்யானவை என்பதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விட முடியும்.

டெங்கு உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களுக்கும், மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கும் இடையே ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. உண்மை என்னவென்றால் கடந்த 2010–ம் ஆண்டு முதல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஆண்டு தோறும் பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது என்பது தான் உண்மை.

டெங்கு உயிரிழப்பை குறைத்து கூறுவதால் பயன் இல்லை. உண்மையில் டெங்குவின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்ற உண்மையை ஒப்புக்கொண்டால் தான் அதற்கான சிகிச்சை அளிக்க முடியும். எனவே டெங்கு உயிரிழப்புகளை குறைத்து காட்டுவதில் கவனம் செலுத்துவதை விடுத்து நோயை கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story