சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து; எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு


சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து; எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Aug 2017 6:55 PM GMT (Updated: 15 Aug 2017 6:55 PM GMT)

நாட்டின் 71–வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தமிழக கவர்னர் நேற்று தேநீர் விருந்து அளித்தார்.

சென்னை,

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், நாட்டின் 71–வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று மாலை 5.45 மணிக்கு தேநீர் விருந்து அளித்தார்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சபாநாயகர் ப.தனபால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் எம்.கே.நாராயணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, எம்.பி.க்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறந்த முறையில் கொடிநாள் நிதி வசூல் செய்த மாவட்ட கலெக்டர்கள் எல்.நிர்மல்ராஜ் (திருவாரூர்), எ.சுந்தரவல்லி (திருவள்ளூர்), கே.ராஜாமணி (திருச்சி) மற்றும் ஈரோடு மாநகராட்சி கமி‌ஷனர் எம்.சீனி அஜ்மல்கான் ஆகியோருக்கு சுழற்கோப்பையை கவர்னர் வித்யாசாகர் ராவ் வழங்கினார்.

பின்னர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் அவருடைய மனைவி சி.எச்.வினோதா ராவ் ஆகியோருக்கு ஒவ்வொருவராக சென்று சுதந்திர தின வாழ்த்து கூறினார்கள். இதன் பின்னர் 6.30 மணி அளவில் முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் புறப்பட்டு சென்றனர். தேநீர் விருந்து முடிந்த பின்னர் கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


Next Story