பஸ் ஊழியர்கள் 24-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு


பஸ் ஊழியர்கள் 24-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2017 12:15 AM GMT (Updated: 9 Sep 2017 6:39 PM GMT)

ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தி 24-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பஸ் ஊழியர்கள் அறிவித்து உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்ந்து காலதாமதமாகி வந்தது.

அதே வேளையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையும் வருவாய் இழப்பை காரணம் காட்டி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இதனை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கட்டங்களாக பல வித போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தனர். இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை நடந்த 9 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த வித சுமுக உடன்பாடும் எட்டப் படவில்லை.

எனவே கடந்த மே மாதம் வேலை நிறுத்தம் செய்தது போல, மீண்டும் ஒரு வேலை நிறுத்தம் செய்யலாமா? என்று போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டனர். இந்த நிலையில் சென்னை பல்லவன் சாலை பணிமனையில் நேற்று 10-வது கட்டமாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையிலும் ஒரு சுமுக உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. குறிப்பாக ஊதிய ஒப்பந்த விஷயத்தில் தொழிலாளர்கள் முன்வைத்த தொகையை ஏற்கமுடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலுவைத்தொகை வழங்குவதில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கமுடியாது என்றும், சிறிது கால அவகாசம் கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் இனியும் பேச்சுவார்த்தை நடத்தி பலனில்லை எனும் முடிவுக்கு வந்தனர்.

பரபரப்பான சூழ்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப்., டி.எம்.டி.எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் மீண்டும் ஒரு வேலைநிறுத்தம் நடத்துவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் தொழிலாளர் துறை கமிஷனர் ஆகியோருக்கு 14 நாட்கள் கால அவகாசம் உள்ளடங்கிய வேலைநிறுத்த கடிதத்தை, தொழிற்சங்க பிரதிநிதிகள் சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது. அந்தவகையில் வருகிற 24-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் போக்குவரத்து தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து தொ.மு.ச. பொருளாளர் கி.நடராஜன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 13-வது ஊதிய ஒப்பந்தம் சம்பந்தமாக 9 கட்டங்களாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 10-வது கட்டமாக தமிழக அரசுடன் நேற்றும் (நேற்று முன்தினம்) பேச்சுவார்த்தை நடந்தது. இதுவரை நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் ‘போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசே ஈடு செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தோம்.

போக்குவரத்து கழகத்தில் பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி, பங்களிப்பு ஓய்வூதிய தொகை, பணிக்கொடை நிதி, விடுப்பு சம்பளம் உள்பட ரூ.5 ஆயிரத்து 400 கோடியையும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.1,600 கோடியையும் அரசு எடுத்து செலவு செய்திருக்கிறது. அந்த தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மே மாதம் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டோம்.

அதனைத் தொடர்ந்து கடந்த மே 16-ந் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களோடு தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைகளை வருகிற செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்வோம் என்று தெரிவித்தனர். ஆனால் பிரச்சினைகளை சரிசெய்யக்கூடிய எந்த நடவடிக்கையும் துளிகூட அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

அரசின் நடவடிக்கைக்காக நாங்கள் காத்திருந்த 3 மாத காலத்தில் மாதத்துக்கு ரூ.200 கோடி வீதம் மொத்தம் ரூ.600 கோடி போக்குவரத்து தொழிலாளர்களின் பணம் உரிய கணக்கு காட்டப்படாமல் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் எங்கள் பிரச்சினைகளை நிரந்தரமாக நீக்குவதற்கு அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை.

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்கவேண்டும் என்றும் கேட்டிருந்தோம். அதாவது தற்போதுள்ள அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தை கூட்டி, அதை மூன்றால் பெருக்கி வரும் தொகையை புதிய அடிப்படை ஊதியமாக கேட்டிருந்தோம். ஆனால் தற்போதுள்ள அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தை கூட்டி, அதை 2.35-ஆல் பெருக்கி வரும் தொகையை அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்கிறோம் என்று அரசு தரப்பில் இருந்து தகவல் வந்தது.

இதனால் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.860-ம், அதிகபட்ச ஊதியமாக அதாவது 29 வருடம் பணியாற்றிய அனுபவமிக்க தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 300 மட்டுமே சம்பள உயர்வாக அரசு எடுத்துக்காட்டி இருக்கிறது. இந்த தொகை எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே எங்கள் நியாயமான கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என்று அரசுக்கு எடுத்து கூறியிருக்கிறோம்.

எனவே எங்கள் அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றக்கோரியும், அமைச்சர்கள் தந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி தரக்கோரியும் அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கும், போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் தொழிலாளர் துறை கமிஷனருக்கும் சட்டப்படியாக 15 நாட்கள் அவகாசத்துடன் உள்ளடங்கிய வேலைநிறுத்த அறிவிப்புக்கான கடிதம் கொடுத்திருக்கிறோம்.

அதன்படி வருகிற 24-ந் தேதியோ அல்லது அதற்கு பின்னர் முடிவு செய்கிற தேதியிலோ திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும். இந்த வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப்., டி.எம்.டி.எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 43 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள். அதே நேரத்தில் எங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து திறந்த மனதுடன் அரசு எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் அதில் நாங்கள் பங்கேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story