தமிழகத்தில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு உறைவிட பள்ளிகள் -மத்திய மந்திரி தகவல்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி கிருஷ்ணன் பால் குர்ஜர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சமூக நலத்துறை மந்திரிகள் பங்கேற்ற மண்டல கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரி கிருஷ்ணன் பால் குர்ஜர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மத்திய மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, விஜய் சம்ப்லா, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, புதுச்சேரி சமூகநலம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை செயலாளர் ஜி.லதா கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உறைவிட பள்ளிகள்
இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய மந்திரி கிருஷ்ணன் பால் குர்ஜர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் ரூ.60 கோடி செலவில் 5 மாவட்டங்களில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு உறைவிட பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12 வகுப்பு வரையில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு பள்ளிகளில் உறைவிட வசதியுடன் கல்வி அளிக்கப்படும். இதற் கான பள்ளி கட்டிடங்கள் ரூ.12 கோடி செலவில் கட்டப்படும். மலை பகுதிகளில் இத்தகைய பள்ளிகள் அமைக்க ரூ.16 கோடி வீதம் மத்திய அரசு வழங்கும். பள்ளிகளில் ஏற்படும் தொடர் செலவினங்களை முதல் மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். 4-வது ஆண்டு முதல் பள்ளிகளில் நடப்புச்செலவினம் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற விகிதாச்சாரத்தில் செலவிடப்படும்.
ரூ.85 ஆயிரம் உதவித்தொகை
உறைவிட பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.85 ஆயிரம் வீதம் உதவித்தொகையாக மத்திய அரசு வழங்கும். மத்திய அரசு முதியோருக்காக பிரத்யேகமான புதிய திட்டம் ஒன்றை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் தென் சென்னையிலும் கன்னியாகுமரியிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கபட்ட முதியவர்களுக்கு கண் கண்ணாடி, சக்கர நாற்காலி, செயற்கைப் பல் செட் உள்ளிட்டவை வழங்கப்படும்.
பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் ஆதிதிராவிட மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மத்திய அரசு அறிவித்த விதிகளின் படி அந்தந்த மாணவ-மாணவிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவேண்டும். இதற்கென அந்தந்த மாநிலங்களில் வலைதளங்களை உருவாக்கி விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே பெறவேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு விதிகளின்படி செயல்படாத மாநிலங்களுக்கு இனி மானியங்கள் வழங்கப்படாது என்று கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story