சாரண-சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ஏன்? எச்.ராஜா பேட்டி
சாரண-சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ஏன்? என்பது குறித்து எச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் நேற்று தொடங்கிய காவிரி மகாபுஷ்கர விழாவில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு புனித நீராடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராடுவது என்பது தி.மு.க.வினருக்கு வாடிக்கையாகி விட்டது. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பது வலுவில்லாத வாதம். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான் அதிகம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 3 ஆயிரத்து 576 பேர் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர். ஆனால் இதே மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களில் 1,757 பேர் தான் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பல முக்கியமான பிரச்சினைகளை மு.க.ஸ்டாலின் கையாளும் விதம் சரியாக இல்லை. இதனால் தான் கருணாநிதி மகனிடம் பொறுப்பை ஒப்படைக்கவில்லை.
போட்டியிடுவது ஏன்?
சாரண-சாரணியர் மாணவர்களுக்கு உடற்பயிற்சி, உள்ளப்பயிற்சி, சமூக சேவை, தேச பக்தி ஆகியவற்றை போதிப்பது தான் எனது நோக்கம். பள்ளி பருவத்தில் இருந்தே, நான் சாரண- சாரணியர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவன். எனவே சாரண- சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்துள்ளேன். இது கூட்டு சதி என ஸ்டாலின் கூறுகிறார்.
காங்கிரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த கட்சி தான் தி.மு.க. வருகிற 20-ந்தேதி வர உள்ள தீர்ப்புக்குப்பின் 2 ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கில் தி.மு.க. குடும்பம் திகார் ஜெயிலுக்கு போக வேண்டிய நிலை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story