குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய இடத்தை பெற முடியாமல் 24 ஆண்டு காலம் தவித்த குடும்பம்


குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய இடத்தை பெற முடியாமல் 24 ஆண்டு காலம் தவித்த குடும்பம்
x
தினத்தந்தி 12 Sep 2017 10:15 PM GMT (Updated: 12 Sep 2017 8:46 PM GMT)

குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய இடத்தை பெற முடியாமல் 24 ஆண்டு காலம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவித்து வந்தனர்.

சென்னை,

சென்னை புரசைவாக்கம் சிவசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் செங்கேனி. இவருக்கு சிவசண்முகபுரம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 1993-ம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பான உத்தரவு எதையும் அதிகாரிகள் வழங்கவில்லை. இந்தநிலையில் செங்கேனி இறந்துபோனார். அவரது மகன் மாரிமுத்து, மகள் எல்லம்மாள் ஆகியோர் அந்த இடத்தை சென்று பார்த்தபோது, அந்த இடத்தை வேறொரு நபர் ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இடத்தை மீட்டுத்தருமாறு சென்னையில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக பதில் அளிக்க குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான ஜெயந்தி உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

24 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு

இதனால் நீதிபதி ஜெயந்தி நேரடியாக களத்தில் இறங்கினார். நேற்று முன்தினம் எல்லம்மாள், மாரிமுத்து ஆகியோரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு நீதிபதி சென்றார்.

இதைதொடர்ந்து செங்கேனிக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கான உத்தரவை அவரது மகன், மகள் பெயருக்கு வழங்க அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்பின்பு, இடத்துக்கான உத்தரவு நகலை அதிகாரிகள் நீதிபதியிடம் வழங்கினர். அவர், அந்த உத்தரவு நகலை மாரிமுத்து, எல்லம்மாள் ஆகியோரிடம் வழங்கினார்.

24 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து மாரிமுத்து, எல்லம்மாள் ஆகியோர் நீதிபதி ஜெயந்திக்கு நன்றி தெரிவித்தனர். 

Next Story