காண்டிராக்டர் தற்கொலை வழக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கைதாகிறார்?


காண்டிராக்டர் தற்கொலை வழக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கைதாகிறார்?
x
தினத்தந்தி 13 Sep 2017 8:32 AM GMT (Updated: 13 Sep 2017 8:32 AM GMT)

காண்டிராக்டர் தற்கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி யுள்ள டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள பெண்டிங்பான் எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்று இந்த சொகுசு விடுதிக்கு கோவை பதிவெண் கொண்ட வாகனத்தில் கோவை பேரூர் டி.எஸ்.பி.வேல்முருகன் தலைமையில் கோவை போலீசார் திடீரென வந்த னர்.

அவர்களுடன் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி உள்ளிட்ட போலீசாரும் வந்திருந்தனர். விடுதி நிர்வாகத்தின் அனுமதி பெற்று விடுதிக்குள் நுழைந்த போலீசார் எம்.எல். ஏ.க்களின்  அறைகளில் சோதனை நடத்தினார்கள்.

நாமக்கல் காண்ட்ராக்டரும்,  சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பருமான  சுப்பிரமணியம் மர்ம மரணம் வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சரும்  பாப்பி ரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் குறித்து விசாரணை நடத்த அவரை அழைத்து செல்ல வந்திருப்பதாக கூறினார்கள். இது  சம்பந்தமான கோர்ட்டு உத்தரவு நகலையும் அவர்கள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் காண்பித்தனர். பின்னர் பழனியப்பன் தங்கி இருக்கிறாரா? என்று ஒவ்வொரு  அறையாக சோதனையிட்டனர். ஆனால்  அவர்  அங்கு இல்லை.

இந்த  சோதனைக்கு எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன், சோளிங்கர்  பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கதிர்காமு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சோதனை நடத்த வாரண்டு உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எங்கள்  கடமையை செய்ய விடுங்கள் என்று போலீசார்  கூறியதை அடுத்து எம்.எல்.ஏ.க்கள் அமைதியானார்கள். அதன் பிறகு ஒவ்வொரு அறையாக சென்று போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனை நடத்திய போது, பழனியப்பன் அங்கு இல்லை.  அவர் அங்கிருந்து  திடீரென மாயமாகி  விட்டதாக கூறப்படுகிறது. போலீசார் வருவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பழனியப்பனை  நேற்று காலையே வேறு ஒரு இடத்திற்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.  பழனியப்பன் சொகுசு விடுதியில் இல்லாததால் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட போலீசார் பின்னர் விடுதியை விட்டு வெளியே வந்தனர்.

இன்று 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்திய மூர்த்தி தலைமையில் போலீசார் குடகு பகுதியில் முகாமிட்டு பழனியப்பன் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, நாமக்கல் காண்ட்ராக்டர் சுப்பிரமணியம் தற்கொலை வழக்கில் நேரில் ஆஜராகு மாறு பழனியப்பனுக்கு 2 முறை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அவர் விசா ரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, கோர்ட்டு உத்தரவின்   பேரில் அவரை தேடி வருகிறோம்.  அவர் குடகில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள் என்றார்.

இந்த நிலையில் பழனியப்பன் எம்.எல்.ஏ. தனது சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி அருகே  மோளையானூரில் உள்ள  வீட்டுக்கும் போலீசார்  சென்று சோதனை நடத்தினார்கள். பழனியப்பன் அங்கும் இல்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது. அவரை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரது வீட்டையும் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் தமிழகத் தில்  35 இடங்களில் சோதனை நடத்தினர். சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும்  அவரது நெருங்கிய நண்ப ரான நாமக்கல், ஆசிரியர் காலனியை சேர்ந்த காண்டி ராக்டர் சுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதற்கடுத்த சில நாட்களில் செவிட்டுரங்கம்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தர விட்டது.

இதனை தொடர்ர்ந்து சுப்பிரமணியம் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிய கடிதங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் சிக்கியது. அதில்  பழனியப்பன் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பப்பட்டு, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பழனியப்பன் நேரில் ஆஜராகி விளக்கம் 
அளித்தார். 2-வது முறை சம்மன் அனுப்பப்பட்டு அவர் ஆஜராகவில்லை. எனவே  கோர்ட்டு உத்தரவுப்படி கைது வாரண்டுடன்  போலீசார் வந்ததாக கூறப்படுகிறது.


Next Story