சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது


சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
x
தினத்தந்தி 16 Sep 2017 10:15 PM GMT (Updated: 16 Sep 2017 10:09 PM GMT)

டெல்லியில் இருந்து ரெயில் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.1¼ கோடி மதிப்பிலான போதை பொருளை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7.40 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலைய 5-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. அப்போது ரெயில் நிலையத்திற்குள் ஒரு துணை சூப்பிரண்டு தலைமையில் 6-க்கும் மேற்பட்ட தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வந்தனர்.

பிளாட்பாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கிவந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ரெயிலின் ‘எச்.ஏ.1’ குளிர்சாதன பெட்டியில் இருந்து ஒரு வெளிநாட்டு பெண் சந்தேகப்படும்படியாக இறங்கிவந்தார். போலீசார் அந்த பெண்ணின் உடைமைகளை சோதனை செய்தனர்.

போதை பொருள்

அவர் வைத்திருந்த பையில் இனிப்பு பெட்டிகள் போல 22 பெட்டிகள் இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதில் ஒரு பெட்டியை எடுத்து சோதனை செய்தனர். அதில் இருந்த மாவு போன்ற பொருளை போலீசார் சோதித்து பார்த்தபோது அது தடை செய்யப்பட்ட போதை பொருள் என தெரியவந்தது.

ஒவ்வொரு பெட்டியிலும் தலா ஒரு கிலோ போதை பொருள் இருந்தது. உடனே அந்த பெண்ணை கைது செய்து, அவர் கொண்டுவந்த 22 கிலோ போதை பொருளையும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரூ.1¼ கோடி மதிப்பு

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் விலை உயர்ந்த போதை பொருட்களை கடத்திவருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் அந்த ரெயிலில் இருந்து இறங்கிவந்த பயணிகளை சோதனை செய்தோம்.

அப்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி பகுதியை சேர்ந்த தில்லியா எதினா(வயது 40) என்ற பெண் வைத்திருந்த பையில் 22 கிலோ எடையுள்ள ‘காபின்’ என்கிற போதை பொருள் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1¼ கோடி. அவரை கைது செய்து, போதை பொருளையும் பறிமுதல் செய்துள்ளோம்.

சென்னையில் வினியோகம்?

அந்த பெண் தனது முதல் இந்திய பயணமாக கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்துள்ளார். டெல்லியில் சில நாட்கள் தங்கியிருந்த அவர் அங்கிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு போதை பொருளை கொண்டுவந்துள்ளார். சென்னையில் இருந்து ஜாம்பியாவுக்கு விமானத்தில் செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது.

போதை பொருளை சென்னையில் யாருக்காவது கொடுக்க இருந்தாரா? அல்லது அவர் தனது நாட்டுக்கு கடத்திச் செல்ல இருந்தாரா? என்பது அவரிடம் நடத்தப்படும் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும்.

கொக்கைன் கடத்தல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்டிரல் ரெயில் நிலையத்தில் விஷால் என்ற நபரிடம் ‘கொக்கைன்’ கைப்பற்றப்பட்டது குறித்து நடத்திய விசாரணையில், பிரபல ஓட்டல் ஊழியரான அவரிடம் சிலர் பண ஆசை காட்டி கடத்தலில் ஈடுபடச்செய்தது தெரிந்தது. எனவே அவரை கடத்தலுக்கு பயன்படுத்தியது யார்? என்று விசாரித்து வருகிறோம். விரைவில் அந்த கும்பலை பிடித்துவிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story