ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அலுவலகத்துக்கு இடம் தேர்வு தீவிரம்


ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அலுவலகத்துக்கு இடம் தேர்வு தீவிரம்
x
தினத்தந்தி 30 Sep 2017 11:45 PM GMT (Updated: 30 Sep 2017 7:13 PM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார்.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தவிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, எழிலகத்தில் உள்ள கலசமகாலில் தன்னுடைய அலுவலகத்தை அமைப்பது தொடர்பாக இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார். அதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை தலைவராக நியமித்தார். விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் விசாரணையை தொடங்குவதற்கு முன்பாக அலுவலகம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை எழிலகத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஒதுக்கப்பட்ட கலசமகால் கட்டிடத்தின் முதல்தளத்தில் உள்ள விசாலமான இடத்தை நேற்று பார்வையிட்டார்.

அங்கு தற்போது தரைஓடுகள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்துவிட்டு திரும்பினார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த இருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தங்களுக்கு அலுவலகம் அமைப்பதற்காக சென்னையில் ஒரு சில இடங்களை பார்வையிட்டனர். விசாரணை நடத்த போதிய தனி அறைகள், விசாரணைக்கு தேவையான தகவல்களை தெரிவிக்க வருபவர்கள் அமருவதற்கான விசாலமான இடங்கள், கார்நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை எதிர்பார்க்கின்றனர். அந்தவகையில் தற்போது கலசமகாலில் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் முதல் தளத்தில் உள்ள விசாலமான இடத்தை பார்வையிட்டு சென்றனர்.

அந்த இடத்தில் தற்போது சுவரில் பூச்சு வேலைகள், தரையில் ஓடுகள் பதிக்கும் பணி மற்றும் கலை வேலைபாடுகளுடன் கூடிய வேலைகளும் நடந்துவருகிறது. விசாரணை கமிஷன் கலசமகாலில் தற்போது பார்வையிட்டுள்ள இடத்தை தேர்வு செய்தால், உடனடியாக பணியை விரைந்து முடித்து வழங்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story