சென்னை ஐகோர்ட்டில் சரத்குமார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி


சென்னை ஐகோர்ட்டில் சரத்குமார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 30 Sep 2017 9:30 PM GMT (Updated: 30 Sep 2017 7:24 PM GMT)

சென்னை ஐகோர்ட்டில் ஆர்.சரத்குமார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை,

தேர்தல் நேரத்தில் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப வழங்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் ஆர்.சரத்குமார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார் போட்டியிட்டார். அவர் தேர்தல் செலவுக்காக காரில் ரூ.9 லட்சத்தை கொண்டு சென்றார். அப்போது அவருடைய காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ததில், காரில் இருந்த ரூ.9 லட்சத்தை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் திருச்செந்தூரில் உள்ள அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான முறையான கணக்குகளை ஆர்.சரத்குமார், தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார். அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பணத்தை ஆர்.சரத்குமாரிடம் திரும்ப வழங்க உத்தரவிட்டது.

அதனடிப்படையில் தேர்தல் ஆணையம் ரூ.500 மற்றும் ரூ.1,000 பழைய நோட்டுகளை ஆர்.சரத்குமாரிடம் வழங்கியுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்பது குற்றம் என்பதால் தனக்கு தர வேண்டிய ரூ.9 லட்சத்தை காசோலை அல்லது டிமாண்ட் டிராப்ட் (டி.டி.) ஆக வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் குறித்த வழக்குகளை எந்த ஐகோர்ட்டும் விசாரிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மனுதாரர் ஆர்.சரத்குமார், சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று உத்தரவிட்டு, வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தார்.

Next Story