‘ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேச்சு


‘ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை  அரசு நிறைவேற்றும் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2017 4:45 AM IST (Updated: 17 Oct 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை இப்போது உள்ள அரசு நிறைவேற்றும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னை,

சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும் 400 கிலோ வாட் மின்திறன் கொண்ட சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையம் திறப்பு விழா மற்றும் தமிழகத்தில் கவர்னராக பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை நூலாக வடித்திருக்கும் தற்போதைய மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், தான் எழுதிய ‘தோஸ் ஈவண்ட்புட் டேஸ்’ என்ற நூல் வெளியீட்டு விழா கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நேற்று நடந்தது.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு, சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையத்தை திறந்துவைத்தார். பின்னர் வித்யாசாகர் ராவ் எழுதிய நூலை வெளியிட, முதல் பிரதியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக்கொண்டார். 2-வது பிரிதியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.

பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேசியதாவது:-

இந்தியாவில் தற்பொழுது உள்ள கவர்னர்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் யாரும் அரசியல் பின்புலத்தினை கொண்டவர்கள் அல்ல. அரசில் நேரடியாக கவர்னர்கள் யாரும் தலையிட முடியாது.

தமிழகத்தில் தற்பொழுது நிலையான அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த தேர்தலின் போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதனை நிறைவேற்றும் நிலையில் இந்த அரசு உள்ளது.

தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறது. அரசிற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை கவர்னர் வழங்குவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

உலக அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து 3-வது நாடாக நம் நாட்டில் அதிகப்படியான சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2030-ம் ஆண்டில் 40 சதவீதம் எரிபொருட்களை பயன்படுத்தாத மின்சாரம் உற்பத்தி செய்வது நம்முடைய இலக்காகும். நாட்டில் உள்ள அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் மின்சாரம் சேமிக்க கற்றுக்கொள்வதுடன், தண்ணீர் பயன்பாடு மூலம் சுத்தம், பசுமை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு கொண்ட நாடாக நம் நாட்டை மாற்ற அனைவரும் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தநிகழ்ச்சியில் வித்யாசாகர் ராவ், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை-மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

இங்கே துணை ஜனாதிபதி தொடங்கி வைத்த சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம் கவர்னர் மாளிகையின் மொத்த மின்சாரம் தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்யப்படும். ஆண்டுக்கு ரூ.45 லட்சம் மின்கட்டணச் செலவு சேமிக்கப்படும்.

சூரிய மின் சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வை-2023-ல் உள்ள திட்டங்களில் முக்கியமானதாகும்.

ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசும் புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

தற்போது தமிழகத்தில் 1,786.48 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் நிறுவுத் திறன் உள்ளது. இதில் 78.44 மெகாவாட் மேற்கூரை சூரிய மின் சக்தியும் அடங்கும். தமிழகத்தில் சூரிய சக்தி மின்சாரம், பகல் பொழுதில் 800 முதல் 1,200 மெகாவாட் அளவிற்கு கிடைக்கப் பெறுகிறது. நாட்டிலேயே, தமிழகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சென்னையில் நடைபெற்று வந்த சர்வதேச அறிவியல் விழாவின் நிறைவு நிகழ்ச்சி அண்ணாபல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். மேலும் மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன், இணை மந்திரி ஒய்.எஸ்.சவுத்ரி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் டி.ஜெயக்குமார், கே.ஏ.அன்பழகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Next Story