“கவர்னர் மாளிகையில் வெங்கையா நாயுடு அரசியல் பேசியது வேதனை” மு.க.ஸ்டாலின் அறிக்கை


“கவர்னர் மாளிகையில் வெங்கையா நாயுடு அரசியல் பேசியது வேதனை” மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2017 10:30 PM GMT (Updated: 17 Oct 2017 6:41 PM GMT)

“எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை என்று கூறிவிட்டு கவர்னர் மாளிகையில் வெங்கையா நாயுடு அரசியல் பேசியது வேதனை அளிக்கிறது”, என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை எதிர்க் கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ராஜ்பவனில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘அரசியல் சட்டப்படி கவர்னர் நடக்க வேண்டும்’, என்றும் ‘தமிழகத்திற்கு நிலையான அரசு வேண்டும்’, என்றும் கூறியிருப்பது தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் அவருக்கு இருக்கும் உயர்ந்த மதிப்பினை, மரியாதையை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது. அதற் காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், அதே விழாவில், ‘அம்மா (ஜெயலலிதா) அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது’, என்றும், ‘ஒரு ஆட்சி அமைந்து, சட்டசபையில் ‘மெஜாரிட்டி’ நிரூபிக்கப்பட்டு விட்டால், பிறகு 5 வருடம் கழித்து மக்களிடம்தான் செல்ல வேண்டும். அரசியல் சட்டத்தை மீறி கவர்னர் நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது’, என்றும் அவர் கூறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன், ‘நான் இனி எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல’, என்று அறிவித்து, அப்பதவிக்குரிய கண்ணியத்தைக் காப்பாற்ற முன்வந்த வெங்கையா நாயுடு, சென்னை ராஜ்பவனில் அரசியல் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதுதானா? என்று கேட்க முனைந்தால், அது அந்தப் பதவி மீது நான் வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் சிறுமைப்படுத்துவதாக அமைந்து விடும் என்பதால், அதுபற்றி அவரே சுயபரிசோதனை செய்து கொள்வார் என்று நம்புகிறேன்.

ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க மறுத்து, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து, ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கும் ‘குதிரை பேர’ அரசு உடனே சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளாலும் எடுத்து வைக்கப்பட்டு, முந்தைய பொறுப்பு கவர்னரிடம் முறையிடப்பட்டு, அதற்குத் தீர்வு ஏதும் கிடைக்காத நிலையில், இன்றைக்கு அதுகுறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருக்கும்போது, அரசியல் சட்டப்படி உயர்ந்த பதவியில் இருக்கும் துணை ஜனாதிபதி இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பது அரசியல் சட்டத்தின் மீதும், கவர்னருக்கு உள்ள கடமைகள் மீதும், துணை ஜனாதிபதி பதவியின் கண்ணியத்தின் மீதும், நம்பிக்கை வைத்திருக்கும் என் போன்றோரை மட்டுல்ல, தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

‘ஒரு அரசு மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டால் 5 வருடங்கள் கழித்து மக்களிடம்தான் செல்ல வேண்டும்’, என்று துணை ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்து, கட்சி தாவல் சட்டத்தின் நோக்கத்திற்கும், அரசியல் சட்டப்படி ஒரு அரசு நடைபெற வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ள நாட்டின் அரசியல் சட்டத்திற்கும், நிச்சயமாக வலு சேர்ப்பதாக இல்லை என்பதை நினைக்கும்போது, வேதனை மேலும் அதிகரிக்கிறது.

அதுமட்டுமல்ல, ‘அம்மாவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’, என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், நாட்டின் துணை ஜனாதிபதி பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர், இதுபோன்ற கருத்தை வெளியிட்டு இருப்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள இயலாதது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெங்கையா நாயுடு தமிழகத்தின் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், ‘பா.ஜ.க. வில் இருந்து விலகிவிட்டேன். இனி நான் எந்தக் கட்சியிலும் இல்லை’, என்று அறிவித்தபடி, தனக்கான கடமைகளை உறுதியுடன் மேற்கொள்வதோடு, கவர்னர் மாளிகையை இனிவரும் காலங்களில் அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தமாட்டார் என்றும் நம்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story