எல்லோரும் எல்லா மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது வெங்கையா நாயுடு


எல்லோரும் எல்லா மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 18 Oct 2017 4:30 AM IST (Updated: 18 Oct 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

தாய்மொழியை முதலில் நேசிக்க வேண்டும் என்றும், எல்லோரும் எல்லா மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது என்றும், வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னை,

காந்தியவாதி நிர்மலா தேஷ் பாண்டேவின் பிறந்தநாள் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர். தக்கர் பாபா வித்யாலயாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மாருதி(தலைவர், அரிசன சேவா சங்கம்), பேராசிரியர் சங்கர்குமார் சன்யால், டாக்டர் எஸ்.பாண்டியன் (தலைவர், தக்கர் பாபா வித்யாலயா) ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் கடந்த ஆண்டு வார்தா புயலின்போது, தக்கர்பாபா வித்யாலயா அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்கிய அமைப்புகளுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். விழாவில் காந்தியவாதி நிர்மலாதேஷ் பாண்டேவின் சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மகாத்மா காந்தியின் புகழ் காலத்தால் அழியாதது. அவரது உண்ணதமான சேவையில் நிர்மலாதேஷ் பாண்டேவும் தன்னையும் ஈடுபடுத்தி உள்ளார். காந்தியின் கொள்கையை கிராமப்புற மக்களிடம் பரப்பியதில் நிர்மல்தேஷ் பாண்டேவின் பங்கு அளப்பரியது.

நிர்மலாதேஷ் பாண்டே தன் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு இலவச விடுதிகள் கட்டி கொடுத்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் பல மாணவர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த 2016-ம் வர்தா புயல் வந்தபோது அறக்கட்டளையின் விடுதிகள், நூலகங்கள் ஆகியவை இடிந்து விழுந்து கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்தேன்.

தக்கர் பாபா வித்யாலயாவின் சமுக நலப்பணி மற்றும் கல்விப் பணிக்காக தனிப்பட்ட முறையில் சம்பளத்தில் இருந்து ரூ.5 லட்சம் நிதி அளிக்க உள்ளேன். நல்ல மனிதர்கள் செய்த உதவியால் தற்போது அவை சீரமைக்கப்பட்டுள்ளன. வித்யாலயாவின் வளர்ச்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

நமது தாய் மொழி நம் அனைவருக்கும் மிக முக்கியம். அனைவரும் முதலில் தாய்மொழியை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். தமிழக மாணவர்கள் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்.

ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளின் அதிபர்கள் இந்தியா வந்தாலும் கூட அவர்களின் தாய் மொழியில் தான் பேசுகின்றனர். நமது வீட்டில் நம் தாய்மொழியை முழுமையாக கற்க வேண்டும். நம் தாயை ‘அம்மா’ என்று தமிழில் தான் அழைக்கவேண்டும், மம்மி, டாடி என்ற வார்த்தைகள் எல்லாம் கூடாது. தாய்மொழி மிக அவசியம். இருப்பினும் பிற மொழிகளையும் நாம் கற்க வேண்டும். நம்மால் எவ்வளவு மொழிகளை கற்க முடியுமோ அவ்வளவு மொழிகளை கற்க வேண்டும், அது நல்லது.

பிரதமர் மோடி கூட சமீபத்தில், வடமாநில மக்களிடம் தமிழை படியுங்கள் என்றும், தமிழக மக்களை இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறினார். எல்லோரும் எல்லா மொழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நான் ஆந்திராவில் பிறந்தவன். அரசியலுக்கு வந்து டெல்லி சென்ற பிறகு தான் பிறமொழிகளின் முக்கியத்துவம் எனக்கு தெரியவந்தது. நாம் அனைவரும் தாய்மொழியை முதலில் நேசிக்க வேண்டும். இருப்பினும் தேவையை உணர்ந்து பிற மொழிகளையும் கட்டாயம் படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story