அரசு போக்குவரத்துக்கழக பணிமனை இடிந்து விழுந்தது: பஸ் கண்டக்டர், டிரைவர்கள் 8 பேர் பலி


அரசு போக்குவரத்துக்கழக பணிமனை இடிந்து விழுந்தது: பஸ் கண்டக்டர், டிரைவர்கள் 8 பேர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2017 9:45 PM GMT (Updated: 20 Oct 2017 8:00 PM GMT)

நாகை மாவட்டம் பொறையாறில் போக்குவரத்து கழக பணிமனை இடிந்து விழுந்ததில் பஸ் கண்டக்டர், டிரைவர்கள் 8 பேர் உடல் நசுங்கி இறந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் பொறையாறு வாலியத்தெருவில் ஒரு தனியார் பஸ் கம்பெனி 1943-ம் ஆண்டு முதல் இயங்கிவந்தது. இந்த கம்பெனியின் கட்டிடம் 6 ஏக்கர் நிலப்பரப்பில் சுண்ணாம்பு காரைகள் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டது. 1974-ம் ஆண்டு தனியார் பஸ் கம்பெனிகள் அரசுடமையாக்கப்பட்டபோது, இந்த பஸ் கம்பெனியும் அரசுக்கு சொந்தமானது.

தற்போது இங்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பழமையான இந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள ஓய்வு அறையில் டிரைவர், கண்டக்டர்கள் 11 பேர் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். கீழ்தளத்திலும் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் திடீரென கட்டிடத்தின் மேல்தளம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

அப்போது கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர். ஆனால், கட்டிடத்தின் மேல்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பூம்புகார் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். கட்டிடத்தில் விரிசல் அதிகமாக இருந்ததால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் பஸ் டிரைவர்களான தனபால் (வயது 52), பிரபாகரன் (54), அவரது தம்பி பாலு (52), முனியப்பன் (42), அன்பரசன் (26), சந்திரசேகர் (45), மணிவண்ணன் (53), கண்டக்டர் ராமலிங்கம் (57) ஆகிய 8 பேர் இறந்தது தெரியவந்தது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவர்களுடைய உறவினர்களும், சக தொழிலாளர்களும் கண்ணீர்விட்டு அழுதனர்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கண்டக்டர்கள் செந்தில்குமார், வெங்கடேசன், டிரைவர் பிரேம்குமார் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கட்டிடம் இடிந்ததில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், கட்டிடத்தை சீரமைக்காத அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலியானவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “முதல்- அமைச்சரிடம் தெரிவித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும். இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்படும்” என உறுதி அளித்தார். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் பொறையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜலு, டி.ஐ.ஜி. லோகநாதன் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

74 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம் பழுதடைந்து அபாய நிலையில் இருப்பது குறித்து இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அரசுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பே தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக பொறையாறு பகுதி முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் இருந்து பொறையாறுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் மட்டும் இயங்கின. ஒரு சில பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது.

Next Story