தார் கொள்முதலில் ஊழல்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு


தார் கொள்முதலில் ஊழல்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Oct 2017 10:15 PM GMT (Updated: 20 Oct 2017 8:26 PM GMT)

தார் கொள்முதல் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், ஜி.பாலாஜி என்ற சமூக ஆர்வலர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிக்காக தார் கொள்முதல் செய்ததில் ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரூ.1000 கோடி வரை ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ், ‘நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் 41 அதிகாரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 19 பேரை ஓய்வு பெற அரசு அனுமதித்துள்ளது. மேலும், 16 பேருக்கு அரசு பதவி உயர்வு வழங்கி உள்ளது. இந்த புகாரில் தொடர்புடைய 90 சதவீத அதிகாரிகள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக திருச்சியை சேர்ந்த ஒரு அதிகாரி மீது மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 6 கோடி ரூபாய்க்கு மட்டுமே முறைகேடு நடந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதாடினார்.

இதைதொடர்ந்து தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை. எந்த முறைகேடும் நடக்கவில்லை. மாறாக தாருக்கான பணத்தை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறுவதில் தான் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் தன்னிச்சையான விசாரணை அமைப்பான லஞ்ச ஒழிப்புத்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அறிக்கை இதுவரை வெளியிடப்படாத நிலையில் எப்படி குற்றம் நடைபெறவில்லை என கூறுகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதன்பின்பு, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணை அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story