பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2017 7:59 PM GMT (Updated: 21 Oct 2017 7:59 PM GMT)

மத்தியில் ஆளும் பா.ஜ.க., ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜ.க., ஆட்சியில் அமர வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றால் மெத்தனப்போக்கும், முறையாக நடவடிக்கைகள் எடுக்காததும் தான் பதிலாக அமையும். காரணம் மிக முக்கியமானப் பிரச்சினைகளான விவசாயிகளின் விவசாயக்கடனை தள்ளுபடி செய்வதற்கும், விவசாயத் தொழிலை காப்பாற்றவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில் துறையை முன்னேற்றவும், விலைவாசியை கட்டுக்குள் வைக்கவும் முறையான செயல்திட்டங்களை வகுக்கவில்லை. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க.வினர் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை மீண்டும் ஞாபகப்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற வேண்டும். மேலும், நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளான விவசாயத்தை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விலைவாசியைக் கட்டுப்படுத்துதல், பெட்ரோல், டீசல் விலையை அரசே நிர்ணயம் செய்தல், ஜி.எஸ்.டி. வரியை குறைத்தல், வராக் கடனை வசூல் செய்தல், கருப்பு பணத்தை மீட்டல் போன்றவற்றில் சிறப்புக்கவனம் செலுத்தி, நடவடிக்கைகள் எடுத்து பொருளாதாரத்தில் மக்கள் முன்னேற்றம் காண, நாடு வளம்பெற வழி வகுத்து தர வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை த.மா.கா. வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story