தமிழகத்தில் காற்று, நீர் மாசுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழகத்தில் காற்று, நீர் மாசுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2017 8:49 PM GMT (Updated: 21 Oct 2017 8:49 PM GMT)

தமிழகத்தில் காற்று, நீர் மாசுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், மாசுகளால் இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் இறப்பதாகவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காற்று, நீர் உள்ளிட்ட மாசுகளால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்து ‘லான்செட்’ மருத்துவ இதழ் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியாகியுள்ள உண்மைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உலகம் முழுவதும் மாசுகளுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலையில், அவர்களில் 25 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாசுகளுக்கு அதிகம் பேரை பலி கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருப்பது கவலையளிக்கிறது.

தமிழகத்தில் மிக மோசமான நீர் மாசு ஏற்படுத்தும் ஆதாரமாக திருப்பூர் சாயப்பட்டறைகள் திகழ்வதாகவும், அவற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நொய்யலாற்றில் கலக்கவிடப்படுவதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ‘லான்செட்’ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சரோ நொய்யலாற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் திறந்து விடப்படவில்லை என்றும், பொதுமக்கள் சோப்புப்போட்டு குளிப்பதால் தான் நொய்யலாற்றில் நுரை அதிகமாக வருவதாகவும் விளக்கமளிக்கிறார். இவர்களைப் போன்றவர்கள் அமைச்சர்களாக இருக்கும் வரை தமிழகத்தில் காற்று, நீர் மாசுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுப்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்.

மாசுக் கேட்டில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேலூர், கடலூர், திருப்பூர் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், குப்பைக் கழிவுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாசுகள் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். அதிக மாசுகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். பெட்ரோலிய மண்டலம் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வலுப்படுத்தப்பட்டு, காற்று, நீர் உள்ளிட்ட அனைத்து மாசுகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story