இரட்டை இலை எங்களுக்குதான் கிடைக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


இரட்டை இலை எங்களுக்குதான் கிடைக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2017 9:45 PM GMT (Updated: 22 Oct 2017 7:03 PM GMT)

எல்லோரும் ஒன்றுபட்ட கருத்துடன் இருப்பதால் இரட்டை இலை எங்களுக்குதான் கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆலந்தூர்,

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை நடக்க உள்ளது. அ.தி.மு.க. சார்பில் ஒட்டுமொத்த நிர்வாகிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் அடிப்படையில் ஒற்றுமை உணர்வுடன் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எல்லோரும் ஒன்றுபட்ட கருத்துடன் இருப்பதால் இரட்டை இலை எங்களுக்குதான் கிடைக்கும். மேலும் ஒரு மாத காலம் தனது பரோலை நீட்டிக்க வேண்டும் என பேரறிவாளன் மனு தந்து உள்ளார். அதுபற்றி முதல்-அமைச்சர்தான் முடிவு செய்வார்.

மதுசூதனன் என் மீது குற்றம்சாட்டி இருப்பதை பத்திரிகைகளில் பார்த்தேன். உள்கட்சி விவகாரங்களை வெளியே வந்து விவாதிப்பது என்பது ஆரோக்கியமான செயல் கிடையாது. ஆர்.கே.நகர் தொகுதியில் யாரை வேட்பாளராக நியமிப்பது என்பது கட்சியின் ஆட்சிமன்ற குழு தான் முடிவு செய்யும்.

தீபாவளிக்கு முன்பே ரூ.14 ஆயிரம் பணத்தை மீனவர்கள் முழுமையாக பெற்று உள்ளனர். இதுபோல் எந்த காலத்திலும் பெற்றது கிடையாது. மீனவர்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். தேவை இல்லாத கருத்துகளை பற்றி நான் கவலைப்படவில்லை.

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த நிர்வாகத்தை முதல்-அமைச்சர் முடுக்கிவிட்டு செயல்படுத்தி வருகிறார். மக்கள் ஒத்துழைப்புடன் கொசுவை ஒழிக்க மாவட்டந்தோறும் மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்படுகிறது.

சென்னையில் சிறந்த டாக்டர்கள், மருத்துகள் உள்ளன. டெங்கு முழுமையாக ஒழிக்கப்படும். தமிழகத்தில் சிறப்பான முறையில் அரசு செயல்படுகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாததால் தி.மு.க.வினர் அரசியலாக்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மத்திய அரசை சாராமல் மாநில அரசுகள் செயல்பட முடியாது. தி.மு.க. 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது டெல்லிக்கு அடிமையாக இருந்தது. ஜெயலலிதா வழியில் நாங்கள் செயல்படுகிறோம்.

கட்சியிலும், ஆட்சியிலும் யார் யாருக்கு எந்த மரியாதையோ அது வழங்கப்படுகிறது. இதில் அச்சம் கொள்ள தேவைஇல்லை. மு.க.ஸ்டாலின் மீண்டும் நமக்கு நாமே பயணம் செல்வதால் எந்த பயனும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story