வெள்ளத்தில் மிதக்கும் சென்னை துரிதமாக இயங்கும் அரசு இயந்திரங்கள்


வெள்ளத்தில் மிதக்கும் சென்னை துரிதமாக இயங்கும் அரசு இயந்திரங்கள்
x
தினத்தந்தி 3 Nov 2017 5:28 AM GMT (Updated: 3 Nov 2017 5:28 AM GMT)

வெள்ளத்தில் சென்னை மிதக்கிறது. மீட்பு நடவடிக்கைகளில் அரசு இயந்திரங்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றன.


சென்னையில் நேற்று காலையில் வெயில் தலை காட்டியது. பிற்பகல் 2 மணியளவில் நகரின் அநேக இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. மாலை 6 மணிக்கு பிறகு மழை வெளுத்து வாங்க தொடங்கியது. இரவு 11 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. அதன் பிறகும் சில பகுதிகளில் மழை நீடித்தது.

இடைவிடாமல் பெய்த பெருமழை காரணமாக சென்னை நகரமே வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் கிட்டத்தட்ட எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். போக்குவரத்து போலீசார் எவ்வளவோ முயன்று போராடினாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து மின்சார ரெயில்களும் வேகம் குறைத்து இயக்கப்பட்டன.

ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. எந்தெந்த குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதோ, அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. தேங்கி இருக்கும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பலத்த மழையில் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன. செம்பாக்கம் பெரிய ஏரி நிரம்பியதால் ஆக்கிரமிப்பாளர்களால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ராஜகீழ்ப்பாக்கம் ஏரியிலும் ஆக்கிரமிப்பு வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உபரிநீர் செல்லும் பகுதியில் ஏரி கரையை உடைக்க சிலர் முயற்சிப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.

இதேபோல பீர்க்கன்காரணை ஏரி நிரம்பிய நிலையில், ஏரிக்கரை பஸ் நிறுத்தம் அருகே தண்ணீர் வெளியேறும் வகையில் கரை உடைபட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஏரி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் மழையால் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் மக்கள் பாதிப்பு 

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் சுற்று வட்டாரப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

சென்னை தண்டுகரை, ஆண்டாள் நகர், பவானிநகர், ராமகிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம் 

விடாது கொட்டும் மழை காரணமாக சென்னையிலுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 வீரர்கள் அடையாறு முகாமிற்கு வருகை. ஆட்சியரின் உத்தரவு வந்தவுடன், மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும். சென்னையில் தடையில்லா போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள 4 சுரங்கப்பாதைகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகிறது  என  வருவாய்துறை செயலாளர் என கூறினார்.

மழையால் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றம் . மழை பாதிப்புகள் தொடர்பாக 599 புகார்கள் பெறப்பட்டுள்ளது; 249 இடங்களில் தண்ணீர் அகற்றம் நிவாரண முகாம்களில் சிறப்பு கவனம் செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Next Story