70 மணல் குவாரிகள் திறப்பதை கைவிடத்தவறினால் விவசாயிகள் ஆதரவுடன், தி.மு.க. சார்பில் போராட்டம் மு.க.ஸ்டாலின்


70 மணல் குவாரிகள் திறப்பதை கைவிடத்தவறினால் விவசாயிகள் ஆதரவுடன், தி.மு.க. சார்பில் போராட்டம் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Nov 2017 11:45 PM GMT (Updated: 22 Nov 2017 6:59 PM GMT)

70 மணல் குவாரிகள் திறப்பதை தமிழக அரசு கைவிடத்தவறினால் விவசாயிகள் ஆதரவுடன், தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் 70 மணல் குவாரிகளைப் புதிதாய் திறக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கிராவல் மண் காண்டிராக்ட் ரகசியமாக விடப்பட்டு, அத்துமீறி ஆங்காங்கே கிராவல் மண்ணை அள்ளி அரசுக்குப் பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச் சாட்டு கிளம்பியிருக்கிறது. மாநிலத்தில் உள்ள முக்கிய பகுதிகளான காவிரி டெல்டா, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆற்றின் இயற்கை வளங்களை எல்லாம் விதிகளுக்கு மாறாக சூறையாடிய அ.தி.மு.க. அரசின் மணல் கொள்ளை இன்றைக்கு சி.பி.ஐ. வரை சென்றிருக்கிறது.

மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ராஜேஷ் லக்கானி கமிட்டி ஒரு விசாரணை அறிக்கையே கொடுத்து, அதுவும் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு, செயற்கை மணல் பயன்படுத்துவதற்கு தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், அதை அ.தி.மு.க. அரசு அப்படியே கிடப்பில் போட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் கடந்த 5.5.2017 அன்று மணல் குவாரிகளில் தமிழக அரசே மணல் விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த காலகட்டத்தில் எத்தனை மணல் குவாரிகளில் மணல் விற்பனை மையத்தை அரசு நடத்தியது? அவற்றில் எவ்வளவு மணல் விற்கப்பட்டது? அரசே மணல் விற்பனை மையத்தை நடத்திய நேரத்தில் மணல் விலை ஏன் செயற்கையாக ஏற்றப்பட்டது? போன்ற பொதுநலன் சார்ந்த கேள்விகளுக்கு எல்லாம் இதுவரை பதிலில்லை.

அதுமட்டுமின்றி, மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் தயாரிக்க விண்ணப்பித்த கம்பெனிகளுக்கு அனுமதி வழங்குவதில் அ.தி.மு.க. அரசு தாமதம் செய்தது ஏன்? தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்கள் பறிபோவதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் விற்பனையை அனுமதிக்க இந்த அரசு மறுப்பது ஏன்? என்ற கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.

அரசு ஏற்கனவே உருவாக்குவதாக கூறிய மணல் விற்பனை நிலையம் முழு வீச்சில் செயல்படாமல் வேண்டுமென்றே முடக்கப்பட்டு, செயற்கை மணல் பயன்படுத்துவதற்கும் போதிய ஊக்கமளிக்காமல், வெளிநாட்டு மணலையும் விற்கவிடாமல், ஒரு செயற்கையான விலை ஏற்றத்திற்கு வித்திட்டுள்ள அ.தி.மு.க. அரசு இப்போது மணல் விலையை கட்டுப்படுத்த, 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்திருப்பது நிச்சயமாக தொலை நோக்குப் பார்வையில் மக்களின் சிரமங்களை போக்குவதற்காக எடுத்த நடவடிக்கை அல்ல என்பதும் இது முழுக்க முழுக்க சுத்த சுயநோக்குப் பார்வையில் எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு என்றும் தெளிவாகிறது.

தமிழகத்தை சிறிது சிறிதாகப் பாலைவனமாக்க முயற்சிக்கும் இந்த அறிவிப்பு, விவசாயத்திற்கான நீர் ஆதாரங்களை முழுவதும் சீர்குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

தரக்கட்டுப்பாட்டுக்குப் பொருத்தமான வகையில் செயற்கை மணல் பயன்படுத்துவதை தீவிரமாக ஊக்கப்படுத்துவதிலும், அந்த மணல் தயாரிப்பில் ஈடுபட விரும்பும் எம்.சேன்ட் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுமதி அளிப்பதிலும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் விற்பனைக்கும் அனுமதி வழங்குவதிலும் ஆர்வம் காட்ட மறுக்கும் குதிரை பேர அரசு, புதிய மணல் குவாரிகளை திறப்பதில் திடீர் ஆர்வம் காட்டுவது முழுக்க முழுக்க முறைகேடுகளுக்கும் ஊழலுக்குமே வழிவகுக்கும்.

அதுமட்டுமின்றி சுற்றுப் புறச்சூழலுக்கும், விவசாயத்திற்கும், குடிநீர் பிரச்சினைக்கும் பேராபத்தாக முடியும். தமிழக நலன் கருதி புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை குதிரை பேர அ.தி.மு.க. அரசு கைவிட வேண்டும். அப்படி கைவிடத் தவறினால், புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படும் இடங்களில் ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் தி.மு.க. சார்பில் அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story