கந்துவட்டி பிடியில் இருந்து சினிமாவை மீட்க வேண்டும் டாக்டர் ராமதாஸ்


கந்துவட்டி பிடியில் இருந்து சினிமாவை மீட்க வேண்டும் டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 23 Nov 2017 7:45 PM GMT (Updated: 23 Nov 2017 5:51 PM GMT)

கந்துவட்டி பிடியில் இருந்து சினிமாவை மீட்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

சென்னை, 

திரைத்துறையினர் தங்களுக்குள் விவாதித்து கந்துவட்டி பிடியில் இருந்து சினிமாவை மீட்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

திரைப்பட தயாரிப்புக்காக கந்துவட்டிக்கு கடன் கொடுத்த அன்புச்செழியன் அவமானப்படுத்தியதால், அதைத்தாங்கிக்கொள்ள முடியாமல் அசோக்குமார் என்ற தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பார்ப்பதற்கு பிரகாசமாக தெரியும் திரையுலகில் நடைபெறும் அதிர்ச்சிகரமான இருட்டு நிகழ்வுகளுக்கு இது ஒரு உதாரணமாகும். தயாரிப்பாளர்கள் ஜீ.வி., அசோக்குமார் ஆகிய இருவரின் தற்கொலைகளுக்கும் மூல காரணமாக இருந்தவர் அன்புச்செழியன் தான் என்று கூறப்படுகிறது.

இத்தனைக்கும் காரணம் இரு திராவிடக் கட்சிகளையும் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் கருப்புப் பணத்தை திரையுலகில் முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டித் தரும் பணியை அவர் செய்து வந்தது தான் எனக் கூறப்படுகிறது. இப்போது கூட அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அன்புச்செழியன் மீது மிகவும் சாதாரணப் பிரிவில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திரைத்துறை தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு வங்கிக் கடன் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் தயாரிக்க வங்கிகள் விதிக்கும் நிபந்தனைகளில் மிகவும் முக்கியமானது படத்தயாரிப்பு செலவுகளில் வெளிப்படைத் தன்மை தேவை என்பது தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வங்கிக்கடன் பெற முயலாமல் கந்துவட்டிக்கு கடன் வாங்கி கண்ணீரில் மிதக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றி திரைத்துறையினர் தங்களுக்குள் விவாதித்து திரைப்பட தயாரிப்புச் செலவை குறைத்தல், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் தமிழ் திரையுலகை கந்துவட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமான அன்புச்செழியனை கைது செய்து கடும்தண்டனை பெற்றுத்தரவும், அவரது கடந்த கால அட்டகாசங்கள் குறித்து விசாரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story