தேர்வுக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


தேர்வுக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 23 Nov 2017 10:00 PM GMT (Updated: 23 Nov 2017 7:52 PM GMT)

மாநில தகவல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் தேர்வுக்கான தேர்வுக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்து வரப்பெற்ற கடிதங்களையும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலையும் பார்வையிட்டேன். அந்த இரு பதவிகளுக்கும் விண்ணப்பித்துள்ளவர்களின் பெயர்கள் மட்டும் அனுப்பப்பட்டுள்ளதே தவிர, அவர்களை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்ப நகல்கள் வழங்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி மாநில தலைமை தகவல் ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் ஒருவரான எம்.ராஜாராம் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, அவரது நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்துசெய்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அவ்வாறு நிராகரிக்கப்பட்டு தகுதியிழந்த ஒருவரை மீண்டும் இந்த அரசு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமித்ததோடு மட்டுமின்றி, இப்போது மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கும் அவரிடமிருந்து விண்ணப்பத்தை பெற்று பரிசீலிக்க இருப்பது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடமை, ஊழலைத் தடுத்தல் போன்ற தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு முற்றிலும் எதிராகவும், அரசின் உள்நோக்கத்தை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கிறது.

அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை பற்றி அறிந்துகொள்ள விரும்பும் குடிமக்களுக்கு தகவல் அளிக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் அமர வேண்டிய மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கான தேர்வு முறையில் இதுபோன்ற பிழையான அணுகுமுறையை அரசு கடைப்பிடித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

23-ந்தேதி நடக்கும் கூட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டு கூட்டத்திற்கான தேதியும் இறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் 21-ந்தேதி வரை விண்ணப்பங்களை பெற்றிருப்பதும் வியப்பளிப்பதாகவும், நேர்மையான தேர்வு முறைக்கு விரோதமாகவும் முரணாகவும் அமைந்திருக்கிறது.

பொதுநலனுக்கு மாறான இந்நிலையில், அரசியல் சட்டப்படியான மிகமுக்கியமான மாநில தலைமை தகவல் ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு அரசியல் சட்டத்தின்படி அறுதிப் பெரும்பான்மை இல்லாத ஒரு அரசு தேர்வு செய்யும் குறைந்தபட்ச தார்மீக உரிமையைக் கூட இழந்துவிட்டதாகவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கருதுகிறேன். நடுநிலையாளர்களும் இந்தக் கருத்தை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே இந்த தேர்வுக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முறைகேடுகளுக்குத் துணைபோக இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Next Story