மாணவி தற்கொலையால் விடுதிக்கு தீ வைப்பு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்


மாணவி தற்கொலையால் விடுதிக்கு தீ வைப்பு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்
x
தினத்தந்தி 23 Nov 2017 9:45 PM GMT (Updated: 23 Nov 2017 8:00 PM GMT)

மாணவி தற்கொலையால் விடுதிக்கு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சோழிங்கநல்லூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். வெளிமாநில மாணவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அதேபோல் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாணவி துருவ ராகமவுலிகா (வயது 18) விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு கம்யூட்டர் என்ஜினீரியங் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் துருவ ராகமவுலிகா தேர்வில் காப்பியடித்ததாக தேர்வு அறையில் இருந்து அவமானப்படுத்தப்பட்டு நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வது குறித்து அதே பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படிக்கும் தனது சகோதரர் ராக்கேஷ்ரெட்டிக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளார். துருவ ராகமவுலிகா, ராக்கேஷ்ரெட்டி இருவரும் இரட்டையர் ஆவர்.

கல்லூரி நிர்வாகம்தான் மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ற தகவல் அங்கு படிக்கும் மாணவர்கள் மத்தியில் தீயாக பரவியது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். விடுதி அறையில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். மேலும் ஜன்னல் கண்ணாடி, டியூப்லைட், மின்விளக்கு உள்ளிட்டவைகளை அடித்து உடைத்தனர்.

இதனால் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் விடுதி இருந்த இடம் போர்க்களம் போல் காணப்பட்டது. மாணவர்கள் அங்கும் இங்கும் செல்வதும், விடுதியின் பல இடங்களில் தீ கொழுந்துவிட்டு எரிவதுமாக இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விடுதி இருளில் மூழ்கியது. வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில் மாணவர்கள் பலர் தங்களது செல்போன் மூலம் எரிவதை படம் பிடித்து பலருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினர்.

இது பற்றி தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அதிக அளவில் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் உயரதிகாரிகள் தலைமையில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அமைதியானார்கள். இந்த வன்முறையில் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்தது.

இதையடுத்து நேற்று காலையில் இருந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை நிர்வாகம் வெளியேற்றி பல்கலைக்கழக பஸ்கள் மூலம் பஸ், ரெயில் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தது. பின்னர் அவரவர் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர். இதையொட்டி பல்கலைக்கழக வளாகம் மற்றும் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்டதாக 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் செம்மஞ்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story