சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை சென்னை பெசன்ட் நகரில் நடந்தது


சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை சென்னை பெசன்ட் நகரில் நடந்தது
x
தினத்தந்தி 24 Nov 2017 11:00 PM GMT (Updated: 24 Nov 2017 7:26 PM GMT)

சென்னை பெசன்ட் நகரில் நேற்று விழிப்புணர்வுக்காக சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை,

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமியால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஆண்டுதோறும் விழிப்புணர்வுக்காக சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை பெசன்ட் நகர் அருகே உள்ள ஊரூர் குப்பத்தில் நேற்று சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையின் முதல் நிகழ்ச்சியாக சுனாமி வருவது குறித்து மாநகராட்சி அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ‘சுனாமி வருகிறது... ஓடுங்கள்... ஓடுங்கள்...’ என்று சத்தமிட்டபடியே வீடுகளில் இருந்து முதியவர்கள், ஊனமுற்றோர், குழந்தைகள் உள்ளிட்டோரை அவசர, அவசரமாக ஸ்டிரச்சர் மூலமாகவும், தங்களின் தோள்களிலும் சுமந்தபடி ஓடிச்சென்று வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பிவைத்தனர்.

இதேபோன்று, மாநகராட்சி ஊழியர்களும் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆட்டோக்கள் மூலமாகவும் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பினர். கடலில் இருந்த மீனவர்களை பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். இந்த ஒத்திகையால் ஊரூர் குப்பத்தில் நேற்று பரபரப்பு காணப்பட்டது.

ஒத்திகை குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை உதவி கமிஷனர் எம்.இ.அப்துல் கனி கூறியதாவது:-

கடல் பரப்பில் ஏற்படும் நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுகிறது. தற்போது நிலநடுக்கம் ஏற்படுவது குறித்து துல்லியமாக கண்டுபிடிக்கப்படுகிறது. எனவே சுனாமி எச்சரிக்கை மையம் மீன்வளத்துறை, மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி நிர்வாகத்தினர், மின்வாரியம் மற்றும் பேரிடர் மீட்புபடையினர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கும்.

உடனடியாக அனைத்து துறையினரும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். அப்போது மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாங்கள் அறிவித்த பாதுகாப்பு மையங்களுக்கு விரைந்து சென்றாலே போதுமானது. முதியோர், மாற்றுத்திறனாளிகளை நாங்கள் சுனாமி பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்வோம். அங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கப்படும்.

சுனாமி முடிந்த பின்னர் மீண்டும் நாங்கள் அந்த பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் மீட்டுவந்து தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்போம்.

இந்த சுனாமி ஒத்திகையின்போது, அந்தமான் நிக்கோபர் தீவு பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கணக்கில் கொள்ளப்பட்டது. சென்னையை போன்று 13 கடலோர மாவட்டங்களிலும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 32 வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 21 வீரர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையை சேர்ந்த 15 வீரர்கள், போலீசார் 25 பேர், மாநகராட்சி ஊழியர்கள் 25 பேர், மீன்வளத்துறை அலுவலர்கள் 3 பேர், மின்வாரிய அலுவலர்கள் 3 பேர் உள்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒத்திகை நிகழ்ச்சிக்காக ரப்பர் படகு, லைப்-ஜாக்கெட்டுகள், ஆம்புலன்ஸ், ஸ்டிரச்சர்கள், தீயணைப்பு வண்டி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.

Next Story