செனகல் நாட்டில் சிக்கித்தவிக்கும் 23 பேரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்


செனகல் நாட்டில் சிக்கித்தவிக்கும் 23 பேரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்
x
தினத்தந்தி 30 Nov 2017 10:45 PM GMT (Updated: 30 Nov 2017 9:23 PM GMT)

செனகல் நாட்டில் சிக்கித்தவிக்கும் 23 பேரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,


Article-Inline-AD

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா பகுதியை சேர்ந்த 23 பேர் அப்பகுதியைச் சேர்ந்த முகவர் மூலமாக மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் சென்டோ நகரில் உள்ள மின்சார நிறுவனத்திற்கு பணிக்கு சென்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் பணிக்குச் சென்ற அவர்களுக்கு ஒரு மாத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதன்பின் இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. உணவு உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படவில்லை.

கொத்தடிமை போன்ற வாழ்க்கையிலிருந்து மீண்டு தாயகம் திரும்ப நினைத்தால், அவர்கள் பணியாற்றும் நிறுவனம் அதற்கும் ஒப்புகொள்ளவில்லை. தங்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்க உதவும்படி செனகல் நாட்டுக்கான இந்திய தூதரிடம் தொழிலாளர்கள் கடந்த 23–ந்தேதி புகார் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்த தொழிலாளர்களை மீட்டு, தாயகம் அழைத்து வரும்படி அவர்களின் உறவினர்கள் கடந்த 25–ந் தேதி வேலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

செனகல் நாட்டில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 23 பேரையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும். அவர்களுக்கு செனகல் நிறுவனம் வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை மத்திய அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும். அத்துடன் அவர்கள் சொந்தமாக சிறுதொழில் தொடங்க தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story