இலவச அரிசி திட்டத்தை நிறுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


இலவச அரிசி திட்டத்தை நிறுத்தும் முடிவை அரசு  கைவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Dec 2017 10:15 PM GMT (Updated: 1 Dec 2017 6:49 PM GMT)

ஜனவரி மாதம் முதல் ரே‌ஷன் கடைகளில் இலவச அரிசி திட்டத்தை நிறுத்தும் முடிவு இருந்தால் அரசு அதை கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டதன் விளைவாக, புத்தாண்டு முதல் பொது வினியோகத் திட்டத்தில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலவச அரிசித் திட்டம் கூட ரத்து செய்யப்படலாம், மற்ற உணவு தானியங்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளைக் காரணம் காட்டி, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கடந்த மாதம் முதல் இரு மடங்காக உயர்த்தப்பட்டது போன்று, அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் வினியோகத்திலும் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என்று பொது வினியோகத் திட்ட பணியாளர்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்த மாற்றங்கள் வரும் ஜனவரி 1–ந் தேதி புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், அதனால் பொதுவினியோகத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்து விடும் என்றும் அந்த பணியாளர்கள் கூறியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொது வினியோகத் திட்டம் என்பது மிகவும் முக்கியமானது. அதை சீர்குலைக்க ஆட்சியாளர்கள் முயன்றால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன். பொதுவினியோகத் திட்டத்தின் நோக்கத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இலவச அரிசித் திட்டத்தைக் கைவிடுதல், உணவு தானியங்களின் விலையை உயர்த்துதல் உள்ளிட்ட திட்டங்கள் இருந்தால் அதை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


Next Story