காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுகிறது சென்னையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை


காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுகிறது சென்னையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2017 8:02 AM GMT (Updated: 2 Dec 2017 8:01 AM GMT)

அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுகிறது. இதனால் சென்னையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது

சென்னை, 

கடந்த 2 நாட் களுக்கு முன் மலாய் தீபகற்ப பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தெற்கு அந்தமான் கடல் வரை வலுவாக பரவியது.
இது மேலும் தீவிரம் அடைந்து அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அது தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் புயல் சின்னமாக  மாறுகிறது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அடுத்த 3 அல்லது 4 நாட் களில் புயல் சின்னமானது சென்னை உள்பட வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக 4-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் இன்று காலை அறிவித்துள்ளது.

புயல் சின்னம் வடக்கு தமிழகம் நோக்கி நகர்வதால் சென்னையை தாக்கும் அபாயம் உள்ளது. காற்று வீசும் திசை மற்றும் அதன் வேகத்தை பொறுத்து அது கரையை கடக்குமா? அல்லது ஆந்திராவை நோக்கி நகருமா? என்பது அடுத்த 48 மணி நேரத்தில் தெரியவரும்.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும். திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும் பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும்  என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story