ஆர்.கே.நகர் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் பிரசாரத்தின்போது சீமான் வாக்குறுதி
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை,
தண்டையார்ப்பேட்டையில் உள்ள ஏ.இ.கோவில் தெரு, எல்.ஐ.ஜி. காலனி, மங்கம்மாள் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கலைக்கோட்டுதயத்துக்கு ஆதரவாக சீமான் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அவருடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் பறை அடித்து சென்றபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பின்போது பொதுமக்களிடம் சீமான் கூறியதாவது:–
திராவிட கட்சிகளை நம்பி, நம்பி மக்கள் ஏமாந்து போய் இருக்கின்றனர். இத்தொகுதி மக்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கிட எல்லா கட்சிகளும் சுற்றி வருகிறார்கள். ஆனால் எதார்த்தமான, நேர்மையான அரசியலை கொண்டுவரும் முயற்சியில் நாங்கள் சுற்றி வருகிறோம்.
இந்தமுறை நாம் தமிழர் கட்சிக்கு பொதுமக்கள் வாக்களித்து, எங்களது வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை வெற்றிபெற செய்யவேண்டும். அப்படி செய்யும்போது இத்தொகுதி வளர்ச்சிக்காக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பணியாற்றும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தண்டையார்ப்பேட்டை வ.உ.சி.நகரில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.