அம்ருதா மனு : ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது உரிமை கோராமல் இறந்த பிறகு உரிமை கோருவது ஏன்? நீதிபதி கேள்வி


அம்ருதா  மனு  : ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது உரிமை கோராமல் இறந்த பிறகு உரிமை கோருவது ஏன்? நீதிபதி கேள்வி
x
தினத்தந்தி 21 Dec 2017 5:41 PM IST (Updated: 21 Dec 2017 5:41 PM IST)
t-max-icont-min-icon

டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது உரிமை கோராமல் இறந்த பிறகு உரிமை கோருவது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு  எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் சுப்ரீம் கோர்ட்டில்   மனு தாக்கல் செய்துள்ளார். 

 பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி, மறைந்த ஜெயலலிதாவின் மகளாகப் பிறந்ததாகவும் ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார் எனவும், ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், இந்த உண்மையை வெளிப்படுத்தப்படவில்லை என்றும்  தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு  எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு  இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்றும் அம்ருதா தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டை அணுகாமல் நேரடியாக  நீங்கள் சுப்ரீம் கோர்ட்டை நாடியது ஏன் என கேள்வி எழுப்பினர்.

அம்ருதாவுக்காக ஆஜரான வக்கீல் பாதுகாப்பு காரணங்களுக்காக தாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாக கூறினார். இதை தொடர்ந்து   ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி  செய்தனர்.

இந்த நிலையில்  டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரி ஜெயலலிதா மகள் எனக்கூறும் அம்ருதா சென்னை ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை   பிற்பகல் 2.15-க்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி  எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் டி.என்.ஏ. சோதனை ஏன் நடத்த கூடாது - அரசு வழக்கறிஞருக்கு  கேள்வி எழுப்பினார்.

டிஎன்ஏ சோதனைக்கு அனுமதித்தால் ஆயிரம் பேர் இப்படி வருவார்கள் . உண்மையான வாரிசு என்று ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் டி.என்.ஏ சோதனைக்கு அனுமதிக்கலாம் என்றும், விளம்பரத்திற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 

இது தங்களது சொந்த விவகாரம் என்றும், விளம்பரம் தேட முயற்சிக்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கிடையே நீதிபதி வைத்தியநாதன், “ ஜெயலலிதா உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிட கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது வாரிசு உரிமை கோராமல் தற்போது இறந்த பின்னர் கோருவது ஏன்? என்றும், தற்போது எதன் அடிப்படையில் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிட முடியும் என்று மனுதாரரை நோக்கி நீதிபதி கேள்வி கேட்டார். 

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது உரிமை கோராமல் இறந்த பிறகு உரிமை கோருவது ஏன்? டிஎன்ஏ பரிசோதனை கேட்காதபோது நாங்கள் எப்படி உத்தரவிட முடியும்? பெங்களூரு சேர்ந்தவர்கள் சென்னை வந்ததை கூறாமல் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் அடிப்படையில் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும். அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்களில் கையெழுத்து உள்ளிட்ட பல குளறுபடி உள்ளது எனக்கூறி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார். 

Next Story