காஞ்சீபுரத்தில் இந்து கோவில் படங்கள் அழிப்பு: மத நல்லிணக்கத்துக்கு சமூக விரோதிகளால் ஆபத்து அரசுக்கு டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை


காஞ்சீபுரத்தில் இந்து கோவில் படங்கள் அழிப்பு: மத நல்லிணக்கத்துக்கு சமூக விரோதிகளால் ஆபத்து அரசுக்கு டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2017 1:00 AM IST (Updated: 24 Dec 2017 10:42 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த ராமானுஜர் மற்றும் இந்து கோவில் படங்களை ஒரு சமூகவிரோத கும்பல் சட்டத்திற்கு முரணாக அழித்து சேதப்படுத்தி இருக்கிறது.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த ராமானுஜர் மற்றும் இந்து கோவில் படங்களை ஒரு சமூகவிரோத கும்பல் சட்டத்திற்கு முரணாக அழித்து சேதப்படுத்தி இருக்கிறது. மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவையாகும்.

அதுமட்டுமின்றி, அந்தக் காட்சிகளை படம் எடுத்து முகநூலில் பரப்பி, ‘விரைவில் இந்து மதத்தையும் அழிப்போம்’ என்று அந்த சமூக விரோத கும்பல் கூறிவருகிறது. மதங்களின் மீது விருப்பு கொள்வதும், வெறுப்புக் கொள்வதும் வெவ்வேறு வி‌ஷயங்கள். அவை தனிநபர் சார்ந்த வி‌ஷயங்கள். அதில் மற்றவர்கள் எவரும் தலையிட முடியாது. ஆனால், ஒரு மதத்தை ஒழிக்கப்போவதாகவும் முகநூலில் பதிவிடுவதும் சகித்துக்கொள்ள முடியாத செயல்களாகும்.

இத்தகைய செயல்களால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேவையற்ற பதற்றம் ஏற்படுவதுடன் மத நல்லிணக்கம் சீர்குலையும் ஆபத்தும் உள்ளது. எனவே, இந்த வி‌ஷயத்தில் மத்திய, மாநில அரசுகளும், ரெயில்வே துறையும் தலையிட்டு இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சீபுரத்தில் மத நல்லிணக்கத்தையும், சட்டம்–ஒழுங்கையும் பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story