நிலத்தடிநீரை பாதுகாக்க முற்படுவோம் நடிகர் கமல்ஹாசன் பேட்டி


நிலத்தடிநீரை பாதுகாக்க முற்படுவோம் நடிகர் கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 16 Feb 2018 10:45 PM GMT (Updated: 16 Feb 2018 7:52 PM GMT)

காவிரியில் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என்றும், நிலத்தடிநீரை பாதுகாக்க முற்படுவோம் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் சிறிய மன நிம்மதி இதில் இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில், நாமெல்லாம் குரங்காக இருந்தபோது காவிரி ஓடிக்கொண்டிருந்தது. இப்போது திடீரென்று அதை சொந்தம் கொண்டாட முடியாது என்று கோபத்தில் சொன்னேன். அதே எதிரொலி இப்போது சுப்ரீம் கோர்ட்டில் வந்தது ஆறுதலாக இருந்தது.

இப்போது குறைந்த அளவு டி.எம்.சி தண்ணீர் கிடைத்தாலும் இதை பத்திரப்படுத்த வேண்டியது தமிழர்களின் கடமை. அதை விட முக்கியமான கடமை இரு மாநிலங்களுக்கான ஒற்றுமை. ஓட்டு வேட்டை என்று நினைத்துக்கொண்டு சச்சரவுகளை தூண்டி விடுபவர்கள் தேசியம் மறந்து பேசுகிறார்கள் என்பது என் கருத்து.

உரிமை கோர முடியாது

காவிரியை யாரும் தனியாக உரிமை கொண்டாட முடியாது என்பது தீர்ப்பு. இன்னும் 15 வருடத்துக்கு அப்பீல் செய்ய முடியாது என்றும் சொல்லி இருக்கிறார்கள். அதற்குள் நாம் கிடைக்கும் தண்ணீரை எப்படி சேமிப்பது, எப்படி பாசனத்துக்கு உபயோகிப்பது என்று யோசிக்க வேண்டும். ஓட்டு விளையாட்டு விளையாடுகிறேன் பேர்வழி என்று சச்சரவுக்கு வழி வகுத்து விடக்கூடாது.

தண்ணீர் குறைந்ததில் வருத்தம்தான். தீர்ப்பு அழுத்தமாக இருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. முன்பு கலவரம் ஏற்பட்டபோது அதை அடக்கும் அளவுக்கு இரு மாநில விவசாயிகளும் ஒற்றுமை காத்தார்கள். அந்த ஒற்றுமை மீண்டும் வர வேண்டும். ஒற்றுமையாக இருந்தால்தான் நதிகள் இணைப்பு குறித்து பேச முடியும்.

ஓட்டு விளையாட்டு

வீடு பற்றி எரியும்போது பீடி பற்ற வைக்கும் ஓட்டு விளையாட்டினால் மக்கள் இருதரப்பிலும் பாதிக்கப்படுகிறார்கள். இங்கு இருப்பவர்களை அங்கு அடிப்பார்கள். அங்கு இருப்பவர்களை இங்கு அடிப்பார்கள். கலாசாரத்துக்கு அது உகந்தது அல்ல. நிலத்தடி நீரை பாதுகாக்காதது குற்றம். அதை பாதுகாக்க முற்படுவோம். அதை அரசு செய்யாவிட்டால் நாமாவது செய்வோம்.”

டி.என்.சேஷனுடன் சந்திப்பு

இந்த நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை கமல்ஹாசன் நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டி.என்.சேஷன் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

இருவரும் 15 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். சந்திப்பு முடிந்து வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- டி.என்.சேஷனை சந்தித்ததின் நோக்கம் என்ன?

பதில்:- டி.என்.சேஷனிடம் உடல்நலம் விசாரிக்க வந்தேன். நான் முக்கிய பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சி பணிகளை தொடங்க இருக்கிறேன். அதற்கு அவருடைய அனுபவ பொழிப்புரையை கேட்பதற்காகவும் வந்தேன். டி.என்.சேஷன் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் செய்தவர். நிலைத்த தன்மை உடையவர்.

அறம் வேண்டும்

அவர் எந்த பதவி வகித்தாலும் எடுத்த முடிவுகளை அடிபிறழாமல் செய்தார். அவரிடத்தில் எனக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் எதைச் செய்தாலும் அறம் வேண்டும் என்று சொன்னார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு வந்தேன்.

கேள்வி:- உங்கள் கட்சியில் டி.என்.சேஷனின் பங்களிப்பு இருக்குமா?

பதில்:- அவருக்கு உடம்புக்கு முடியவில்லை. என்னிடம் ஒரு நல்ல வார்த்தை சொன்னார். அது மனதுக்கு இதமாக இருந்தது. அதாவது என் உடல்நிலை சரியாக இருந்தால் நான் உங்கள் கட்சியில் சேர்ந்து இருப்பேன் என்றார். அவருக்கு நன்றி சொன்னேன். ஏதாவது அறிவுரை தேவை என்றாலோ அல்லது சந்தேகங்கள் இருந்தாலோ உங்களிடம் வந்து கேட்கலாமா என்று கேட்டேன். எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்றார்.”

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். 

Next Story