மதுரை கூட்டத்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்துக்கு அழைப்பு, கூட்டணி குறித்து கமல்ஹாசன் பதில்


மதுரை கூட்டத்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்துக்கு அழைப்பு, கூட்டணி குறித்து கமல்ஹாசன் பதில்
x
தினத்தந்தி 18 Feb 2018 10:44 AM GMT (Updated: 18 Feb 2018 10:44 AM GMT)

மதுரை கூட்டத்தில் கலந்துக்கொள்ள ரஜினிகாந்துக்கு நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்து உள்ளார். #Rajinikanth #KamalHassan

சென்னை,

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  என்னுடைய வாழ்க்கை பயணத்தில் முக்கிய முடிவு எடுத்த போதும் அவரிடம் சொன்னேன், இப்போது பயணத்திற்கு புறப்படும் முன் பிடித்தமானவர்களிடம் சொல்லிவிட்டு செல்கிறேன். ரஜினிகாந்துடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை. என்னுடைய அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்றார். 

அப்போது, உங்களுடைய கட்சி தொடக்க விழா கூட்டத்தில் கலந்துகொள்ள ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கமல்ஹாசன் பதில் அளிக்கையில், அதுவும் சொல்லி இருக்கிறேன் என்றார். 

 உங்கள் அழைப்புக்கு ரஜினிகாந்த் என்ன சொன்னார்? என்ற பதில் கேள்விக்கு, அதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். வற்புறுத்த கூடாது என பதில் உரைத்தார். 

ரஜினிகாந்தும் இணைந்து செயல்படுவது தொடர்பான கேள்விக்கு காலம் வரும்போது பார்க்கலாம் என பதில் அளித்தார். தேசிய அளவிலான தலைவர்களை சந்திக்க வாய்ப்பு வரலாம் என குறிப்பிட்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்கு, மு.க.ஸ்டாலின் சார்பில் உங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்த கமல்ஹாசன், அப்படி எதுவும் கிடையாது. அது தவறானது என்றார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை எப்போது சந்திப்பது பற்றி அவர்கள் சொல்ல வேண்டும் என கூறினார் கமல்ஹாசன்.

Next Story