காவிரி நீர் பங்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு


காவிரி நீர் பங்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு
x
தினத்தந்தி 18 Feb 2018 8:30 PM GMT (Updated: 18 Feb 2018 8:18 PM GMT)

காவிரி நீர் பங்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படு்ம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அம்மா ஸ்கூட்டர்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலில் நடக்கும் இந்த அரசு, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. வருகிற 24-ந் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 1 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. நதிகளை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறேன். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து கூறியதாவது:-

அடுத்தகட்ட நடவடிக்கை

கேள்வி: காவிரி நதிநீர் வழக்கில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமா?

பதில்: இன்னும் 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இதில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

கேள்வி: காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவீர்களா?

பதில்: ஏற்கனவே நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரதமரை சந்தித்த போது, தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விளக்கி இருக்கிறேன். சென்னை வந்த மத்திய மந்திரி நிதின் கட்காரியிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரத்தை முழுமையாக படித்த பின்னர், சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி பிரதமரை சந்திப்பது குறித்து முடிவெடுப்பேன்.

பதில் சொல்ல மறுப்பு

கேள்வி: பிரதமர் மோடி சொன்னதால் தான் தமிழக அமைச்சரவையில் இணைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது குறித்து?

பதில்: ஓ.பன்னீர்செல்வம் என்ன பேசினார் என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை. அதனால், அது குறித்து எதுவும் சொல்வதிற்கில்லை. முழுமையாக தெரிந்த பிறகு பதிலை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி

சேலம் மாநகரில் 362 சாலைகளை ரூ.94.39 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு செய்வதற்கான பணிக்கான பூமி பூஜை நேற்று பள்ளப்பட்டியில் நடந்தது. விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தும், திட்டப்பணிக்கான அடிக்கல்லும் நாட்டினார்.

அப்போது அவர் கூறுகையில், “ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோதே சேலம் மாநகரம் ‘ஸ்மார்ட் சிட்டி’க்கு தேர்வாகி விட்டது. ரூ.1,908 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் முழுமை அடையும்போது சேலம் சுகாதாரமான நகரமாக மாறும். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விரைவில் தொடங்கப்படும். உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெற்று 3 விருதுகளை பெற்றுள்ளது“ என்றார்.

விழாவில் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

Next Story