15-வது நிதி ஆணைய விசாரணை வரம்பை திரும்ப பெற குரல் கொடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


15-வது நிதி ஆணைய விசாரணை வரம்பை திரும்ப பெற குரல் கொடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:30 PM GMT (Updated: 19 Feb 2018 7:58 PM GMT)

மாநிலங்களின் நிதித் தன்னாட்சிக்கு விரோதமான 15-வது நிதி ஆணையத்தின் விசாரணை வரம்பை திரும்பப் பெற தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மாநிலங்களின் நிதித் தன்னாட்சிக்கு விரோதமான 15-வது நிதி ஆணையத்தின் விசாரணை வரம்பை திரும்பப் பெற தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்குப் பரிந்துரை செய்யப்படும்” என்று என்.கே.சிங் தலைமையிலான மத்திய நிதி ஆணையம் அறிவித்து இருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

“அளவான குடும்பம்” என்ற அடிப்படையில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ள தமிழகத்தின் நிதித் தன்னாட்சியைக் குறைக்கும் வகையில், இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது தமிழகத்திற்கு அளிக்கப்படும் தண்டனை என்றே கருதுகிறேன்.

1971-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 13-வது நிதி ஆணையத்தில் செய்யப்பட்ட பரிந்துரைகளும், அதே, 1971-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன்பிறகு ஏற்பட்ட மக்கள்தொகை வளர்ச்சி அடிப்படையில், 14-வது நிதி ஆணையப் பரிந்துரைகளும் தமிழகத்தின் நிதிநிலைமைக்கு வலுவூட்டவில்லை.

குறிப்பாக, 14-வது நிதி ஆணையம் எடுத்துக்கொண்ட அடிப்படை அளவுகோளின் காரணமாக 13-வது நிதி ஆணையத்தின் மூலம் கிடைத்த வருவாயைவிட 19 சதவீதம் குறைந்துவிட்டது. அதனால் தமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கு அடிப்படையில் 15-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்யும் என்பது, 13-வது நிதி ஆணையத்தில் கிடைத்ததைவிட 70 சதவீத இழப்பாகவே அமையும் என்ற அபாயகரமான செய்திகளை பொருளாதார நிபுணர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

குடும்பக்கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்துவதிலும், வருவாய் அதிகம் திரட்டித்தருவதிலும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, தமிழகம் 15-வது நிதி ஆணையம் மூலம் வஞ்சிக்கப்படுவதை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தநிலை தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக மாநில அரசுகளின் நிதி தன்னாட்சிக்கு விடுத்த மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமைந்திருக்கிறது.

இந்த பாரபட்சமான அடிப்படையானது, எதிர்காலத்தில் மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபடவும் வழிவகுத்து விடக்கூடும் என்று அஞ்சுகிறேன். மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களிலும், மக்களின் சுகதுக்கங்களிலும் முதலில் அக்கறை செலுத்துவது மாநிலத்தில் உள்ள அரசுதான்.

அந்த அரசுக்கு நிதி ஒதுக்கீட்டில் சம அந்தஸ்து கொடுத்துப் போற்றுவதுதான் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான மாநிலங்களின் நிதித் தன்னாட்சிக்கு உரிய பெருமையைச் சேர்க்கும். சமூக, பொருளாதார உட்கட்டமைப்பு உருவாக்கும் மிகப்பெரிய கடமையை நிறைவேற்ற வேண்டிய மாநில அரசுகளுக்கு, 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நிதி ஒதுக்கீடு பரிந்துரை செய்யப்படும் என்பது நடைமுறைக்கு ஏற்றது அல்ல. அதை ஒப்புக்கொள்ளவும் முடியாது.

எனவே, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பிரதமரையும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியையும் நேரில் சந்தித்து, இதுபற்றி முறையிட்டு, நியாயமான தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று, தி.மு.க. சார்பில், 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே 15-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் அமைந்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியையும், நிதி மந்திரி அருண்ஜெட்லியையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், 15-வது நிதி குழுவின் விசாரணை வரம்புகளை உடனடியாக மாற்றியமைத்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். மாநிலங்களின் நிதித் தன்னாட்சிக்கு விரோதமான இந்த 15-வது நிதி ஆணையத்தின் விசாரணை வரம்பை திரும்பப்பெற, பாதிக்கப்படும் அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story