நீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


நீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 19 Feb 2018 9:00 PM GMT (Updated: 19 Feb 2018 8:36 PM GMT)

தமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் கோட்டீஸ்வரி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

நீரில் மூழ்கி பலி

தமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கி பலர் பலியாகுகின்றனர். குறிப்பாக கோடை விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் ஆழம் தெரியாத நீர்நிலைகள், பயன்பாடு இல்லாத கல்குவாரிகளின் நீர்தேக்கங்களில் குளிக்கச் செல்பவர்கள் நீரில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

‘செல்பி’ எடுக்கும்போது சிலர் நீரில் சிக்கி இறந்துள்ளனர். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி 11 ஆயிரத்து 884 பேர் உயிர் இழந்துள்ளனர். அதில், 90 சதவீதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

தடுப்புச்சுவர்

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே கடற்கரை ஓரங்கள், சுற்றுலா தலங்களில் உள்ள நீர்நிலைகள், கோவில் குளங்கள், அருவிகள் போன்றவற்றில் உயிர் இழப்புகளைத் தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். முக்கியமான நீர்நிலைகளில் உள்ள ஆபத்தான பகுதிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். கடல் சீற்றம் அதிகம் உள்ள சென்னை திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரை தடுப்புச்சுவர் அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

என்ன நடவடிக்கை?

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர், ‘கடற்கரைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைப்பது குறித்தும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை பணியமர்த்துவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர், ‘தமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story