கட்சி பெயர், கொடி, கொள்கைகளை கமல்ஹாசன் இன்று அறிவிக்கிறார்


கட்சி பெயர், கொடி, கொள்கைகளை கமல்ஹாசன் இன்று அறிவிக்கிறார்
x
தினத்தந்தி 21 Feb 2018 12:00 AM GMT (Updated: 20 Feb 2018 6:57 PM GMT)

ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்திற்கு செல்லும் வழியில், கமல் ரசிகர்கள் “நாளை நமதே” என்ற பெயர் பொறித்த வரவேற்பு கொடிகளை பறக்க விட்டுள்ளனர். #KamalHaasan

சென்னை,

கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை மதுரையில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் கமல்ஹாசன் இன்று அறிவிக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார். கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன் தனது நண்பர்கள் மற்றும் மூத்த அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் சீமான் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

சின்ன வயதில் இருந்து, படிக்கிற காலத்தில் இருந்து அவரது (கமல்ஹாசன்) ரசிகனாக வளர்ந்தவன் நான். ஒரே ஊரு, ஒரே மண். இன்றைய சூழ்நிலையில், தமிழகத்தில் அரசியல் மிக மோசமான நிலைக்கு போய்க்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். எந்த வழியிலாவது ஒரு மாற்றம் நிகழ்ந்துவிடாதா? என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், என்போன்ற பிள்ளைகள் எல்லாம் அதை முனைப்போடு செய்துகொண்டு இருக்கிறபோது, மண்ணின் மைந்தனாக இருக்கக்கூடிய, மக்கள் பெரிதும் நேசிக்கக்கூடிய கலைஞராக இருக்கும் அண்ணன் கமல்ஹாசன் இந்த அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று 21-ந் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார்.

அதில், ஒவ்வொரு தலைவராக அவர் சந்தித்து வாழ்த்துகளை பெற்று வந்த சூழலில், என்னை சந்திக்க வேண்டும் என்றபோது, அவர் வந்து என்னை சந்திப்பது நன்றாக இருக்காது என்று நானே இங்கு வந்தேன். மண்ணின் மகன், மகத்தான கலைஞன் எல்லாவற்றையும் தாண்டி, நான் நேசித்து வளர்ந்த ஒரு கலைஞர். அவர் என்னை வந்து பார்ப்பது சரியாகாது. தமிழ் பண்பாட்டு அளவில் சரியாக இருக்காது. அதனால் தான் நான் வந்து பார்த்தேன். ராமேசுவரத்தில் இருந்து தொடங்கும் அவரது பயணம் ஒரு புரட்சிகர பயணமாக, வெற்றிகர அரசியல் பயணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதற்காக நான் உளமாற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கமலின் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா? என்று சீமானிடம் நிருபர்கள் கேட்டனர்.

அப்போது கமல்ஹாசன், சீமானைப் பார்த்து “இதற்கு உங்கள் அனுமதியோடு நான் பதில் கூறலாமா என்று கேட்டார்”. தொடர்ந்து கமல்ஹாசன் கூறியதாவது:-

அதாவது என்னுடைய கொள்கை என்னவென்று சீமானுக்கு தெரியாது. என்னை அவருக்கு தெரியும். நான் நடித்த சினிமா பற்றித்தான் அவருக்கு தெரியும். கொள்கை என்பது அரசல் புரசலாக நான் பேசும்போது, தென்படும் வார்த்தைகளை வைத்து பொழிப்புரை எழுதி கொள்ள வேண்டுமே தவிர, முழுவதுமாக புரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. 21-ந் தேதி நான் செய்ய போகும் பிரகடனங்களை அவர் பார்த்துவிட்டு தன் முடிவை அவர் சொல்ல வேண்டும் அதுதான் நியாயம்.

கேள்வி:- ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பாத நீங்கள்(சீமான்) கமல்ஹாசனை நேசிப்பது ஏன்?

சீமான் பதில்:- இது(தமிழ்நாடு) எங்கள் மண். பொள்ளாச்சி என்பதை புத்தகத்தில் படித்து பயன் இல்லை. போய் பார்க்க வேண்டும். இங்கு இருக்கும் நெசவாளர் பிரச்சினை என்ன? உழவர் பிரச்சினை என்ன? மாணவர் பிரச்சினை என்ன? மீனவர் பிரச்சினை என்ன? பேருந்து தொழிலாளர் பிரச்சினை என்ன? மின்பொறியாளர் பிரச்சினை என்ன? இது எல்லாம் தெளிவாக தெரியும்போதுதான் சரிசெய்ய முடியும். சும்மா வந்த உடன் எல்லாம் செய்துவிட முடியாது.

கேள்வி:- நீங்கள்(கமல்ஹாசன்) அரசியலுக்கு வந்தால் 10 சதவீத வாக்கு கூட வாங்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறாரே?

கமல்ஹாசன் பதில்:- மூத்தவர்கள் எல்லாம் அப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். மூத்தவர் என்று சொல்லும்போது, எங்கள் அண்ணன் சாருஹாசனையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

கேள்வி:- அரசியல் பயணத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ரஜினி, இடதுசாரி, வலதுசாரி கட்சித் தலைவர்களை சந்தித்தீர்கள். அ.தி.மு.க. வினரை சந்திக்காதது ஏன்?

கமல்ஹாசன்:- இந்த ஆட்சி சரியில்லை என்று நான்(கமல்ஹாசன்) தெளிவாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். எனவே அ.தி.மு.க.வினரை சந்திக்க போவதில்லை.

கேள்வி:- இப்போது வரிசையாக நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு காரணம் என்ன?

கமல்ஹாசன்:- எல்லோரும் வர வேண்டும் என்பது தான் எங்கள் வேண்டுகோள். வராமல் இருந்ததால் தான் நாங்கள் வரவேண்டிய நிலை வந்துள்ளது. நமக்கு கடமை இல்லை, யாராவது பார்த்துக் கொள்வார்கள் என்று நினைப்பது தவறு என்று நினைக்கிறேன்.

கேள்வி:- ஊழலுக்கு எதிராக இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா?

சீமான்:- ஊழல் என்பது நிர்வாக சீர்கேடு அதை நான் (சீமான்) நினைத்தோ, அவர் (கமல்ஹாசன்) நினைத்தோ சீர்படுத்த முடியாது. ஒரு இடைத்தேர்தலில் 100 கோடி செலவழித்து ஓட்டுகளை வாங்கி வெற்றி பெறுகிறார்கள். ஓட்டுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வாக்குகளை பெறுபவர்கள் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்வார்கள். ஓட்டுக்கு காசு கொடுக்கும் நிலைதான் ஊழலை அங்கீகரிப்பது. இதை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது.

நீங்கள்(பத்திரிகையாளர்கள்) விரும்பினால் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். விரும்பவில்லை என்றால் பணியாற்றவில்லை.

இவ்வாறு அவர்கள் பதில் அளித்தனர்.

சீமானுடன் நடந்த சந்திப்புக்குப்பிறகு கமல்ஹாசன் மதுரை செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் பயணத்தை தொடங்கிவிட்டேன். என் கட்சியில் முக்கியமாக அங்கம் வகிப்பவர்கள், மதுரை கூட்டத்தில் பங்கேற்பவர்கள், வாழ்த்த வருபவர்களும் பங்கேற்கிறார்கள். யார், யார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லாவற்றையும் இங்கேயே சொல்லிவிட்டால் அங்கு சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story