5 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


5 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Feb 2018 7:15 PM GMT (Updated: 21 Feb 2018 6:35 PM GMT)

தமிழகத்தில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசுத் துறைகளில் தேவையற்ற பணியிடங்களை அடையாளம் கான ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆதிசே‌ஷய்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அமைக்கப்பட்டதன் பின்னணி மற்றும் நோக்கம் குறித்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அரசு பணியிடங்களை குறைக்க முயற்சி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காலிப்பணியிடங்கள் ஏற்படும்போது அவற்றை நிரந்தரப் பணியாளர்களைக்கொண்டு நிரப்புவதற்கு பதிலாக தற்காலிக பணியாளர்களை நியமிப்பது, பல பணிகளை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி அயல்பணி முறையில் வெளியாட்களைக்கொண்டு செய்வது ஆகியவை தான் தமிழக அரசின் நோக்கம். அதை நிறைவேற்றித் தருவதற்காகவே ஆதிசே‌ஷய்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அரசு ஊழியர்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 79.78 லட்சம் பேர் படித்துவிட்டு, அரசு வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 பேருக்கு அரசு வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக உள்ளது. எனவே, அரசு பணியிடங்களை குறைக்கும் முடிவை கைவிட்டு, அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story