ஜெயலலிதா மரணத்தின் சந்தேகங்கள் குறித்து முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் 4 மணி நேரம் வாக்குமூலம் வீடியோ ஆதாரங்களும் தாக்கல்


ஜெயலலிதா மரணத்தின் சந்தேகங்கள் குறித்து முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் 4 மணி நேரம் வாக்குமூலம் வீடியோ ஆதாரங்களும் தாக்கல்
x
தினத்தந்தி 21 Feb 2018 11:15 PM GMT (Updated: 21 Feb 2018 7:08 PM GMT)

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். #Jayalalithaa

சென்னை,

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்தார்.

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் அ.தி.மு.க. சார்பில் முதன் முதலாக முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் நேற்று ஆஜர் ஆனார். அவருடன் 50–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வந்திருந்தனர்.

அவர், ஜெயலலிதா சிகிச்சைக்காக போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரையிலும், சிகிச்சையில் இருந்த போதும் என்னென்ன தடயங்கள் மறைக்கப்பட்டன என்பது குறித்தும், டி.டி.வி.தினகரனின் முரண்பட்ட கருத்துகள் பற்றியும், வீடியோ ஆதாரங்களுடன் காலை 10½ மணி முதல் மதியம் 2½ மணி வரை 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

2012–ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்த போது அவரை ஜெயலலிதா எப்படி நடத்தினார், அவர் மீதான சந்தேக பார்வை எப்படியெல்லாம் இருந்தது, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதில் இருந்து இறந்த நேரம் வரை நடந்த மர்மங்கள், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகள் போன்ற அனைத்தையும் ஆணையத்தில் விரிவாக கூறினேன்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அது தொடர்பான அவரது புகைப்படத்தை மருத்துவமனையில் இருந்து வெளியிடுவார்கள் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் புகைப்படமோ, வீடியோவோ வெளியிடப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக்கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்ததால் அதுபோன்று புகைப்படம், வீடியோ எடுக்கவில்லை என்று கூறி உள்ளார்.

இப்படி கூறிய அவரிடம் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ எப்படி வந்தது என்பதை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். சிகிச்சையின்போது ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என்கிறார்கள். ஆனால், டி.டி.வி.தினகரன் ஜெயலலிதாவை மருத்துவமனையில் நேரில் பார்த்ததாகவும், அவரைப்பார்த்து ஜெயலலிதா கையை அசைத்ததாகவும் கூறி உள்ளார். இந்த வீடியோவையும் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளேன். தேவையானபோது இதுகுறித்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

2016–ம் ஆண்டு செப்டம்பர் 22–ந் தேதி ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவமனைக்கு தொலைபேசியில் பேசிய டி.எஸ்.பி., ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று கோரி உள்ளேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு அங்கிருந்த 27 கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட யார் காரணம்?, எதற்காக அகற்ற சொன்னார்கள்?, பாதுகாப்பு படை வீரர்கள் ஏன் உடன் செல்லவில்லை?, ஜெயலலிதாவை பார்க்க அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவை ஏன் அனுமதிக்கவில்லை என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.

விசாரணையை தாமதப்படுத்துவதற்காகவே தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய சசிகலா காலஅவகாசம் கோரி வருகிறார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது சசிகலாவின் உத்தரவுப்படி செயல்பட்ட ஜெயலலிதாவின் ஆலோசகர்கள், உதவியாளர்கள் தற்போது சசிகலாவை யார் என்று தெரியாது என்று கூறுவது ஜெயலலிதாவுக்கு செய்கிற துரோகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story