ஏப்ரல் 4-ந்தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் கமல்ஹாசன் அறிவிப்பு


ஏப்ரல் 4-ந்தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் கமல்ஹாசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2018 12:00 AM GMT (Updated: 22 Feb 2018 7:02 PM GMT)

அடுத்த பொதுக்கூட்டம் ஏப்ரல் 4-ந்தேதி திருச்சியில் நடைபெறும் என்று கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan

ஆலந்தூர்,

நடிகர் கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற விழாவில் தனது கட்சியின் பெயரை அறிவித்த அவர், கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் கலந்துகொண்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதற்கு ஏதாவது சட்டசிக்கல் இருக்கலாம். அதுபற்றி தெரியவில்லை. எங்கள் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டோம். அதற்கான ரசீதும் வாங்கப்பட்டு விட்டது.

‘கிராமியமே எங்கள் தேசியம்’ என்று அறிவித்து இருப்பதால் அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டு இருக்கிறோம். நான் இங்கே திரும்பி வந்தது ஒரு வேளை என் தேவை இருக்கலாம் என்ற நம்பிக்கையில் வந்தேன். இல்லையென்றால் என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன்.

அடுத்த மாதம் திட்டமிட்டபடி சிவகங்கை, திண்டுக்கல், பரமக்குடி அருகே ஒரு ஊர் என சில ஊர்களுக்கு செல்லும் பணி தொடரும்.

மதுரையில் நடந்ததுபோல் அடுத்த கூட்டம் ஏப்ரல் 4-ந் தேதி திருச்சியிலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

நான் விதைதான். மரபணு மாற்றப்பட்டது என விஞ்ஞானம் பேசி இருக்கிறார்கள். அதுபற்றி எனக்கு தெரியவில்லை. அதுபற்றி இப்போது பேச வேண்டாம். கட்சியை தொடங்கி இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் பிரச்சினையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க.வுடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்பு இருக்குமா? என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு கமல்ஹாசன், “மக்கள் பிரச்சினைகளில் வாதாட அனைத்துக்கட்சிகளுடன் ஒத்துழைத்து பேசுவது கடமை. தேர்தல் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு காலம் இருக்கிறது. அதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தனி கட்சியாக தொடங்கி இருப்பதால் எங்கள் பலம் என்ன?. கொள்கை என்ன?. நோக்கம் என்ன?. எங்கே செல்கிறோம்? என்பதை பொறுத்து தான் முடிவு செய்வோம்” என்றார்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு மதியம் 3.30 மணியளவில் கமல்ஹாசன் வந்தார்.

அப்போது அவருடைய வீட்டின் முன்பு திரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மேள-தாளங்கள் முழங்கவும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்ற கமல்ஹாசனை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது அவருடைய கட்சி உயர்மட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீபிரியா, தங்கவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன்பின்னர் வீட்டுக்குள் கமல்ஹாசனை தொண்டர்கள் வரிசையாக நின்று சந்தித்தனர். பூங்கொத்து வழங்கி பலர் வாழ்த்துக் கூறினர். சிலர் வாழ்த்து தெரிவிக்க பொன்னாடை எடுத்து வந்திருந்தனர். ஆனால் கமல்ஹாசன் பொன்னாடைகளை ஏற்க மறுத்துவிட்டார். கட்டியணைத்து அவர்களுடைய வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக கமல்ஹாசன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் வருமாறு:-

கேள்வி:- 8 கிராமங்களை தத்தெடுத்து உள்ளர்கள். அங்கு என்னென்ன பணிகளை செய்யப்போகிறீர்கள்?

பதில்:- அங்கு நடத்த உள்ள பணிகளுக்காக சில சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது உள்ளது. அதற்கு அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கிடைக்காத பட்சத்தில் கிராமங்களுக்கு தேவையான வசதிகளை எங்களால் முடிந்த அளவு செய்வோம்.

கேள்வி:- கட்சியில் நீங்கள் என்ன பொறுப்பு வகிக்கிறீர்கள்?

பதில்:- நிறுவனத்தலைவர்.

கேள்வி:- கட்சி கொடியின் நிறங்கள் எதனை குறிக்கின்றன?

பதில்:- கொடியில் உள்ள வெள்ளை நேர்மையையும், சிவப்பு உழைப்பையும் குறிக்கும். 6 இணைந்த கைகளானது புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களையும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களையும் குறிக்கும்.

கேள்வி:- உங்கள் கட்சியின் கொள்கை பற்றி விளக்குங்களேன்.

பதில்:- நீங்கள் என்னென்ன செய்யத் தவறினீர்களோ, அதை எல்லாம் செய்வது எங்கள் கொள்கை. சமுதாய சேவைக்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் கட்சிக்கு இருக்க வேண்டிய கொள்கைகள் என்னென்னவென்று மக்கள் நினைக்கிறார்களோ அவை அனைத்தும் எங்கள் கொள்கை.

ஊழல் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. எங்களிடம் ஊழல் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். அதன்பின்பு ஊழலை ஒழிக்க முயற்சி செய்வோம். வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பல்வேறு கருத்துகள், விமர்சனங்களை கூறி வருகிறார்கள். அவற்றில் நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்வோம். அதன் மூலம் எங்களை நாங்களே திருத்திக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசன் மதுரை விமான நிலையத்திற்கு வருவதை அறிந்த அவருடைய ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டனர். அப்போது அங்குள்ள நடைபாதையில் 3 பிளாஸ்டிக் டப்பாக்கள் கேட்பாரற்று கிடந்தன. வெகு நேரமாக யாரும் எடுக்காததால் அவற்றில் வெடிகுண்டு எதும் இருக்குமோ என்ற பதற்றம் ஏற்பட்டது.

மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் அந்த டப்பாக்களை சோதனை செய்தனர். சோதனையில் அந்த டாப்பாக்களில் சாப்பிடும் உணவுப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டப்பாக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Next Story