ஆந்திர சிறையில் உள்ள 3 ஆயிரம் தமிழர்களை மீட்க நடவடிக்கை தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஆந்திர சிறையில் உள்ள 3 ஆயிரம் தமிழர்களை மீட்க நடவடிக்கை தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Feb 2018 10:00 PM GMT (Updated: 22 Feb 2018 7:47 PM GMT)

ஆந்திர சிறையில் உள்ள 3 ஆயிரம் தமிழர்களை மீட்க நடவடிக்கை தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை,

ஆந்திர சிறையில் உள்ள 3 ஆயிரம் தமிழர்களை அங்குள்ள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியோ, சட்ட நடவடிக்கை மேற்கொண்டோ மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தைச் சேர்ந்த 2,700 முதல் 3 ஆயிரம் வரையிலான கூலித் தொழிலாளர்கள், செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு ஆந்திர மாநில சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்த மாநிலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களில் 90 சதவீதத்தினருக்கும் மேற்பட்டவர்கள் ஆந்திரக் காவல்துறையினரால் தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு செம்மரக் கடத்தலில் எந்தவித தொடர்பும் கிடையாது. பல தமிழர்கள் எந்தவித விசாரணையும் இல்லாமல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழர்கள் மீதான வழக்குகளை நடத்துவதோ, அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தருவதோ ஆந்திரக் காவல்துறையின் நோக்கமாகத் தெரியவில்லை. மாறாக, அவர்கள் மீதான வழக்குகளை நடத்தாமல், தொடர்ந்து சிறைகளிலேயே அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவது தான் ஆந்திராவின் நோக்கமாகத் தோன்றுகிறது.

ஆந்திர சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களில் சிலர் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைவர் மீதும் சராசரியாக 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. ஒரு வழக்கில் பிணை வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு ஆவதால் அனைத்து வழக்குகளிலும் பிணை வாங்கி விடுதலையாவது சாத்தியமல்ல என்ற விரக்தி நிலைக்கு சென்றுவிட்ட தொழிலாளர்கள் விடுதலை என்பதை மறந்துவிட்டு, கொடுமைகளுக்கு பழகிவிட்டனர். அவர்களை மீட்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தியோ, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டோ அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இச்சிக்கலை மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story