கமல்ஹாசனும், நானும் வேறு, வேறு பாதையில் சென்றாலும் போய் சேரும் இடம் ஒன்று தான் ரஜினிகாந்த் பேட்டி


கமல்ஹாசனும், நானும் வேறு, வேறு பாதையில் சென்றாலும் போய் சேரும் இடம் ஒன்று தான் ரஜினிகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2018 11:30 PM GMT (Updated: 23 Feb 2018 7:37 PM GMT)

கமல்ஹாசனும், நானும் வேறு, வேறு பாதையில் சென்றாலும் போய் சேரும் இடம் ஒன்று தான் என்று ரஜினிகாந்த் கூறினார். #Rajinikanth

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து சந்தித்து வருகிறீர்கள். நீங்கள் ரசிகர்களை நேரடியாக களத்தில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறுமா?

பதில்:- நேரம் வரும்போது நிச்சயமாக அது நிறைவேறும்.

கேள்வி:- தமிழக அரசு நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில், எல்லா தலைவர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- ரொம்ப நல்லது. வரவேற்கத்தக்கது.

கேள்வி:- மக்கள் பிரச்சினைகளுக்காக இதே போன்று ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- அப்படி நிச்சயம் இருக்கவேண்டும்.

கேள்வி:- கமல்ஹாசன் நடத்தி உள்ள முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- ரொம்ப நன்றாக இருந்தது. நான் முழுவதுமாக எல்லாவற்றையும் பார்த்தேன். ரொம்ப நல்லா நடத்தினார். நான் ஏற்கனவே அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டேன். இந்த விழாவை பார்த்த பிறகு நான் மறுபடியும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- கமல்ஹாசன் சரியான பாதையில் பயணிக்கிறார் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- எல்லாம் வெவ்வேறு பாதையில் போனாலும் கூட போய் சேரும் இடம் ஒன்று தான். எல்லாம்(நானும், கமல்ஹாசனும்) மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான்.

கேள்வி:- கமல்ஹாசன் தொடங்கி உள்ள ‘மக்கள் நீதி மய்யம்’ பற்றி உங்களுடைய பார்வை என்ன?

பதில்:- நிச்சயமாக நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கமல்ஹாசன் நல்ல திறமைசாலி. நிச்சயம் நன்றாக நடத்துவார். மக்களுடைய நம்பிக்கையை அவர் சம்பாதிப்பார்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story