தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் அமைக்க அரசு உரிமம் வழங்க வேண்டும்


தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் அமைக்க அரசு உரிமம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Feb 2018 10:30 PM GMT (Updated: 25 Feb 2018 10:30 PM GMT)

தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் அமைக்க அரசு உரிமம் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் விளம்பர பலகைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்றும்படி 2008-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டது. அதைதொடர்ந்து விளம்பர பலகைகளை அமைப்பதற்கான புதிய விதிகளை தமிழக அரசு வகுத்தது. ஆனாலும் அதன்படி புதிய உரிமங்கள் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனியாருக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் அமைப்பதற்கு அனுமதி அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது. விளம்பர பலகைகளை வழங்கும் அதிகாரம் மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பான விண்ணப்பங்களை ஒற்றை சாளர முறையில் பெற்று, ஒரு மாதத்துக்குள் அனுமதி வழங்கவேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டிருந்தது.

ஆனால் அதன் பின்னர் 1½ ஆண்டுகள் ஆகியும் இதுவரை விளம்பர பலகைகளை அமைப்பதற்காக ஓர் உரிமத்தை கூட தமிழக அரசு வழங்கவில்லை. அதுமட்டுமின்றி சென்னையில் இத்தகைய உரிமம் வழங்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டால் சென்னையில் மட்டும் தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் ஆண்டுக்கு ரூ.250 கோடி வருமானம் கிடைக்கும்.

தனியார் நிறுவனங்களில் விளம்பர பலகைகளை அமைக்கும் தொழில் மூலமாக மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உரிமம் வழங்க அரசு மறுப்பதால் 5 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுப்படி தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் அமைப்பதற்கு அரசு உரிமம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story