நடிகை ஸ்ரீதேவி மரணம்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்


நடிகை ஸ்ரீதேவி மரணம்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 25 Feb 2018 10:36 PM GMT (Updated: 25 Feb 2018 10:36 PM GMT)

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:-

‘16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும், தமிழ்த்திரை உலகில் இருந்து ‘பாலிவுட்’ என சொல்லப்படும் இந்தி திரைத்துறையில் பல்லாண்டுகள் கோலோச்சியவருமான நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு திரைத்துறைக்கும், கலைத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆன்மா நற்கதியடைய அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-

தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் தி.மு.க. சார்பில் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-

நடிகை ஸ்ரீதேவியின் மறைவால் பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திரையுலகில் சிறுவயது முதல் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். அவரது இழப்பு திரையுலகுக்கு மிகப்பெரிய ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

தென் தமிழகத்தில் தேசிய குடும்பத்தில் பிறந்து தனது நடிப்பு திறமையால் இந்திய தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு எனது அஞ்சலி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சினிமா துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்திய சினிமா உலகுக்கு இது மிகப்பெரிய பேரிழப்பு.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர்:-

தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து தன் ஒப்பற்ற நடிப்பாற்றலால் திரையுலகில் புகழ்கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி. பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளையும், பல கோடி ரசிகர்களையும் பெற்றவர். அவரது மறைவை நம்பமுடியவில்லை. மிகவும் துரதிருஷ்டவசமானது. மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தமிழகத்துக்கு புகழும், பெருமையும் சேர்த்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

பன்முகத்திறமை கொண்ட நடிகை ஸ்ரீதேவி தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பவர். ஸ்ரீதேவியின் மறைவு அவரது குடும்பத்துக்கும், இந்திய திரையுலகத்துக்கும் குறிப்பாக தமிழ் திரையுலகத்துக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு ஆகும். ஸ்ரீதேவியை இழந்துவாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-


தமிழகத்தில் பிறந்து குழந்தை பருவம் முதல் தமிழ் திரையுலகில் நடித்து படிப்படியாக உயர்ந்து பல இந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக நடிப்புத்துறையில் சாதனைகளை படைத்து வந்த ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவருடைய மறைவு திரை உலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். ஸ்ரீதேவியின் மறைவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலகத்தினருக்கும், ரசிக பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-

தமிழக திரையுலக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும், இந்தி உள்ளிட்ட வடமொழிகளிலும் நடித்து புகழ்பெற்றவர். அவரது மறைவு தமிழக, இந்திய திரையுலகில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது. அதை நிரப்ப யாராலும் முடியாது.


Next Story