நெல்லையில் வெடிகுண்டு வீசி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை


நெல்லையில் வெடிகுண்டு வீசி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
x
தினத்தந்தி 26 Feb 2018 6:14 AM GMT (Updated: 26 Feb 2018 6:14 AM GMT)

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லை, 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் கொடியன்குளம் குமார். இவர் மீது கொலை, மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான இவர் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடன் சேர்ந்து இவரது  மருமகன் பாளை அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

சமீபத்தில் மருமகன் செந்தில்குமார் பாளை கே.டி.சி. நகரில் ஒரு இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்தை மற்றொரு தரப்பினர் தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து மருமகன் செந்தில்குமாருக்கு பாதுகாப்பாக கொடியன் குளம் குமாரும் பாளை அண்ணாநகரில் அவருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் பாளை அண்ணா நகரில் உள்ள அவர்களது வீட்டுக்கு ஒரு மர்ம கும்பல் வந்தது. அவர்கள் வீட்டுக்குள்  நுழைவதற்கு முன்பு நாட்டு வெடிகுண்டில் மிளகாய் பொடி தூளையும் சேர்த்து வைத்து கட்டி வீட்டுக்குள் எரிந்தனர்.

இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மிளகாய் பொடி சிதறியது. இதில் வீட்டுக்குள் இருந்தவர்கள் கண் எரிச்சல் ஏற்பட்டு என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், அந்த மர்மக்கும்பல் வீட்டுக்குள் அரிவாள், கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கொடியன்குளம் குமாரையும், அவரது மருமகன் செந்தில் குமாரையும் சரமாரி அரிவாளால் வெட்டினர். 

அப்போது கொடியன் குளம் குமார் பின்வாசல் வழியாக படுகாயத்துடன் தப்பி ஓடினார். ஆனால் அந்த மர்மக்கும்பல் செந்தில் குமாரை சுற்றி வளைத்து மார்பு, வயிறு உள்பட பல இடங்களில் கத்தி மற்றும் வாளால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டது. வீட்டில் இருந்த செந்தில்குமார் மனைவியும், உறவினர்களும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய செந்தில்குமாரையும், கொடியன்குளம் குமாரையும் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்திலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். கொடியன்குளம் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது.

Next Story