ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்


ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
x
தினத்தந்தி 26 Feb 2018 9:15 PM GMT (Updated: 26 Feb 2018 8:35 PM GMT)

ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மீண்டும் ஒரு முறை அவமதிப்பு நிகழ்ந்திருப்பதும், மத்திய பா.ஜ.க. மந்திரிகள் பங்கேற்ற விழாவிலேயே இத்தகைய தரந்தாழ்ந்த செயல் நடந்திருப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது. சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, உலக வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியில் மதம் சார்ந்த இறைவணக்கப் பாடல் இசைக்கப்பட்டு, அதற்கு அனைவரும் மரியாதை செலுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கமாகவும், நாட்டுப்பண் நிறைவாகவும் இசைக்கப்படும் நிலையில், மத்திய அரசின் நிறுவனமான ஐ.ஐ.டி.யில் தமிழ் மொழியையும் தமிழர்களின் பண்பாட்டையும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, மதச்சார்பற்ற உயர்கல்வி நிறுவனத்தில் மதத்தைப்போற்றும் பாடல் இசைக்கப்பட்டிருப்பது, திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது. இதற்கு என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.

வருத்தம் தெரிவிக்க வேண்டும்

மத்திய அரசு என்றால் இந்தி-சமஸ்கிருதம் இவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் என்பதும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் அனைத்தையும் அலட்சியப்படுத்தும் என்பதும் நான்கு ஆண்டு கால பா.ஜ.க. அரசில் தொடர்கதையாக உள்ளது. இந்தியாவின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மைதான். அதனைச் சிதைக்கும் நோக்கம் கொண்ட அணுகுமுறையை, மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் இனியாவது கைவிடவேண்டும் என்றும், சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு மத்திய அரசு வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய தவறுகள் நேராதிருக்க உறுதியளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதற்கு மாற்றாக சமஸ்கிருத வாழ்த்து பாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழை அழித்து, சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கான இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு விழாக்களாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக சமஸ்கிருத வாழ்த்துப் பாடலை திட்டமிட்டு இசைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழை புறக்கணிக்கும் வகையில் சமஸ்கிருதப் பாடலை இசைத்ததற்காக சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

இனிவரும் காலங்களில் ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை உறுதிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடமொழியான சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்டும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு இருக்கின்றது. அதன் ஒரு கட்டம்தான், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக வடமொழிப் பாடலைப் பாடியதாகும். உலகத்தின் தொன்மையான செவ்வியல் மொழியான தமிழை, தமிழ்த்தாய் வணக்கத்தைப் புறக்கணித்து அவமதிக்கும் துணிச்சல் ஐ.ஐ.டி.க்கு எப்படி ஏற்பட்டது? மத்திய அரசின் வடமொழித் திணிப்பு வெறியும், ஆணவமும், அகம்பாவமும், திமிரும்தான் இதற்கு காரணம்.

ஐ.ஐ.டி. நிகழ்வு, தமிழர்களின் தன்மானத்திற்கும், தமிழ் மொழியின் மாண்புக்கும் விடப்பட்ட அறைகூவல் ஆகும். தமிழகத்தின் தலைநகரிலேயே தமிழைப் புறக்கணித்து, வடமொழிப் பாடலைத் திணித்தது எவ்விதத்திலும் மன்னிக்கக்கூடியது அல்ல. இதற்குப் பொறுப்பான ஐ.ஐ.டி. நிர்வாகிகளுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், நிகழ்வில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிப்பது என்பதைப் போல, நம் உச்சந்தலையிலேயே ஏறி மிதிக்கலாம் என்ற இந்துத்துவ வெறிப்போக்குக்கு எதிராக தன்மானத் தமிழர்கள் அனைவரும் வெகுண்டு எழ வேண்டிய நேரம் இது. உறங்கும் புலியை இடற வேண்டாம் என மத்திய அரசை எச்சரிக்கின்றேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் தொடங்கி, மத்திய பா.ஜ.க. மந்திரிகள் தமிழ்நாட்டை, தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிப்பதற்கும், காங்கிரஸ் கட்சியை வரம்பு மீறி வசை பாடுவதற்கும், காங்கிரஸ் இல்லாத பாரதம் காண கனவு காண்பதற்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு சரியான பதிலடி தமிழக மக்கள் தேர்தலின் போது தருவார்கள்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரே இந்தியா, ஒரே தேசியம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்னும் இந்துத்துவாவின் இத்தகு திருவிளையாடல்கள் படிப்படியாக அரங்கேறி வருகின்றன. சென்னை ஐ.ஐ.டி.யின் தமிழ் விரோத போக்கினை எதிர்த்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை விரைவில் நடத்தும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. ஆட்சியாளர்களின் இத்தகைய சமஸ்கிருத திணிப்பு மற்றும் மதவாதப் போக்கினை இனியும் தமிழ்நாட்டில் அனுமதிக்காத வண்ணம் அனைவரும் குரலெழுப்பிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமஸ்கிருதத்தில் பாடல் பாடப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இங்கு நடந்த விழாவில் குமரி மாவட்டம் மணக்குடியில் துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பை மீறி கையெழுத்தாகியிருக்கிறது இதுவும் கண்டிக்கத்தக்கது’ என்று கூறியுள்ளார். 

Next Story