பள்ளி மாணவன் கொலை சம்பவம்: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்


பள்ளி மாணவன் கொலை சம்பவம்: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 27 Feb 2018 10:00 PM GMT (Updated: 27 Feb 2018 8:49 PM GMT)

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி (வயது 45). இவர் தனது 15 வயது மகள், 4-ம் வகுப்பு படித்து வந்த மகன் சமயன் ஆகியோருடன் 21-ந் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் இவருடைய வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், ஆராயி உள்ளிட்ட 3 பேரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் சமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். சுய நினைவு இழந்து உயிருக்கு போராடிய ஆராயி, அவருடை மகள் ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலாத்காரம் நடந்ததா?

இச்சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் தாய்-மகள் பலாத்காரம் செய்யப்பட்டார்களா? என்பதை கண்டறிய அவர்கள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முடிவு வெளியாகவில்லை. இது தொடர்பாகவும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விரைவில் பிடிப்போம்

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் முன்விரோதத்திலோ, சாதி ரீதியிலான காரணங்களுக்காகவோ நடைபெறவில்லை. தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நள்ளிரவில் மர்ம கும்பல் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளது. இச்சம்பவத்தில் பழைய குற்றவாளிகள் ஈடுபட்டதாக தெரியவில்லை. இதில் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கருதுகிறோம். அவர்களை விரைவில் பிடிப்போம் என்றனர். 

Next Story