தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்


தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்
x
தினத்தந்தி 21 March 2018 12:00 AM GMT (Updated: 20 March 2018 10:01 PM GMT)

ரத யாத்திரை பிரச்சினையை சட்டசபையில் மு.க.ஸ்டாலின் எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால், தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டதால், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் நடைபெற்றது. முன்னதாக, காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கியது.

கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, விசுவ இந்து பரிஷத் நடத்தும் ராம ராஜ்ய ரத யாத்திரையை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசுடன் தமிழக அரசை இணைத்தும் சில கருத்துகளை தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “5 மாநிலத்தில் இந்த ரத யாத்திரை நடந்திருக்கிறது. இதில் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. இதிலே எவ்வித பிரச்சினையும் எழுந்ததாக எனக்கு தெரியவில்லை. நீங்களும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள். அது தான் தெளிவாக தெரிகிறது” என்றார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதும், தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து நின்று தி.மு.க. உறுப்பினர்களுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள்.

இதனால், அவையில் கடும் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. இந்த நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் பொன்முடி, தனது கையில் வைத்திருந்த துண்டுச் சீட்டில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சப்தமாக வாசித்தார். அதனை தி.மு.க. உறுப்பினர்கள் திரும்ப கூறினார்கள். அவை நடவடிக்கைகள் முடங்கியது.

கடும் அமளிக்கு இடையே தி.மு.க. உறுப்பினர்களுக்கு துண்டுச்சீட்டு வழங்கப்பட்டது. சபாநாயகர் ப.தனபால் எழுந்து நின்று, அனைவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருக்கையில் அமரும்படியும் வலியுறுத்தினார்.

இந்த நேரத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி (நாகப்பட்டினம் தொகுதி), தனது இருக்கையில் இருந்து வெளியே வந்து, இரு கைகளையும் உயர்த்தி, கோஷமிட்டபடி ஆவேசமாக சபாநாயகர் இருக்கையை நோக்கி பாய்ந்து வந்தார். இதனால், அவையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

சபாநாயகர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் தமிமுன் அன்சாரி ஈடுபட்டார். அவரை, சபாநாயகர் ப.தனபால் கடுமையாக எச்சரிக்கை செய்தார். அதன்பின்னர், தனது இருக்கைக்கு திரும்பிய அவர், அங்கிருந்தபடியே கோஷம் எழுப்பினார்.

இந்த நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர்களும், அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் எழுந்து, இதே பிரச்சினையை வலியுறுத்தி பேச முயன்றனர்.

தொடர்ந்து, சட்டசபையில் கடும் அமளி நீடித்ததால், சபாநாயகர் ப.தனபால் எழுந்து நின்று, “அவையை நடத்த எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். பலமுறை உங்களுக்கு வாய்ப்பளித்து விட்டேன். அனைவரும் இருக்கையில் அமருங்கள். இதை எச்சரிக்கையாகவே நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ஆனால், சபாநாயகரின் சமாதானத்தை ஏற்காத தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால், சுமார் 25 நிமிடங்கள் அவை முடங்கியது.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால், தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றம் செய்ய அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். உடனே, மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். ஆனால், சட்டசபை சுற்றுப்பாதையில் அவர்கள் நின்றுகொண்டு தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அதன் பிறகு, அங்கிருந்தும் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

அதன்பின்னர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, “எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதால், அவரது பேச்சு முழுவதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுகிறேன்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால், மு.க.ஸ்டாலின் பேச்சு முழுவதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இந்த நேரத்தில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி எழுந்து, மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் சில கருத்துகளை தெரிவித்தார்.

அவரது பேச்சு முழுவதையும் நீக்குவதாக சபாநாயகர் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோல், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் உ.தனியரசு ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட தி.மு.க. உறுப்பினர்கள், காலை 11.40 மணியளவில் தலைமைச்செயலகத்திற்கு எதிரே காமராஜர் சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் பலர் தரையில் அமர்ந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

சம்பவ இடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காமராஜர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பிராட்வேயில் இருந்து அடையாறு நோக்கி வந்த வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. அதேபோல், அடையாறு பகுதியில் இருந்து பிராட்வே வந்த வாகனங்கள், போர் நினைவுச்சின்னம் அருகே மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.

சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களை போலீசார் அப்புறப்படுத்தி, கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
அந்த நேரத்தில், கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்களும், தமிமுன் அன்சாரியும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதனால், அப்பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களை, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினார்கள். கைது செய்யப்பட்ட தி.மு.க. - காங்கிரஸ் உறுப்பினர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story