பி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டை 29-ந் தேதி விண்ணில் ஏவ திட்டம்


பி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டை 29-ந் தேதி விண்ணில் ஏவ திட்டம்
x
தினத்தந்தி 21 March 2018 11:19 PM GMT (Updated: 21 March 2018 11:19 PM GMT)

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஐ என்ற செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டை 29-ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு, இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை தயாரித்து திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தியது.

இதில் 2013-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. நாளடைவில் இதில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கெடிகாரம் பழுதானது. இந்த செயற்கைகோளில் இருந்து படங்கள் உள்ளிட்ட தகவல்களை பெறுவதில் விஞ்ஞானிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டது. இதனால் பழுதான செயற்கைகோளுக்கு மாற்றாக, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற 8-வது செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.

இந்த செயற்கைகோள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. கடுங்குளிர், வெப்பம் உள்ளிட்ட எந்த சூழ்நிலையிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இதை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தும் முயற்சி நடந்தது. ஆனால் செயற்கைகோளை சுற்றி இருந்த வெப்ப தகடுகள் விடுபடாததால் அது தோல்வியை தழுவியது.

இதையடுத்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏ செயற்கைகோளுக்கு மாற்றாக தற்போது 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஐ என்ற செயற்கைகோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். இது 10 ஆண்டுகள் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை 29-ந் தேதி மாலை 5.20 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக பி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டை வடிவமைத்தனர்.

இதன் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்புவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டின் எடை 321 டன் ஆகும். இது இந்தியாவின் 43-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட். இதற்கான ‘கவுண்ட்டவுன்’ 27-ந் தேதி தொடங்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

Next Story