அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்


அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
x
தினத்தந்தி 23 March 2018 11:45 PM GMT (Updated: 23 March 2018 10:57 PM GMT)

அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு இலவச கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேடுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை,

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அம்மா கல்வியகம் சார்பில் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இலவச கையேடுகள் வழங்கப்பட்டன. இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நீட் தேர்வு உள்பட அனைத்து விதமான தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் அ.தி.மு.க. சார்பில் இலவச கையேடுகள் வழங்கியிருக்கிறோம். அம்மா கல்வியகம் ( www.ka-lv-iy-a-g-am.in) என்ற இணையதளத்தில் இந்த புத்தகத்தை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இது மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இருக்கும் என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த ஜெயலலிதா பாடுபட்டார். இதற்காக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தார். கல்வித்தாயாக ஜெயலலிதா விளங்கினார். தற்போது இந்த அரசும் மாணவர்களுக்காக பாடுபட்டு வருகிறது. பல்வேறு வங்கிகளில், நிறுவனங்களில் வேலையில் சேர உரிய பயிற்சி அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியை ஜெயலலிதா கொண்டு வந்தார். இளைஞர்கள் சுய தொழில் தொடங்க நல்ல சூழல் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அம்மா கல்வியகம் மூலம் பிளஸ்-2 மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது வரையில் இந்த இணையதளத்தில் 3½ லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அதிக மதிப்பெண்களையும் பெற்று உள்ளனர். உயர் படிப்புகளிலும், அரசு தேர்வுகளில் வெற்றி பெறும் வகையிலும் கையேடு வழங்கப்பட்டு இருக்கிறது’ என்றார்.

மாணவர்கள் இந்த கையேடுகளை பதிவிறக்கம் செய்ய அம்மா கல்வியகம் இணையதளத்திற்குள் சென்று அங்கு தங்கள் பற்றிய விவரங்களை முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு பாடங்களை அவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜெ.தீபாவின் கணவர் மாதவன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தார். அவர் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, ஓராண்டை நிறைவு செய்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறவே வந்துள்ளேன் என்று தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்று விட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அங்கு வந்த மாதவன் முதல் மாடிக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.

Next Story